2,600 பெட்… 534 ஐ.சி.யூ… நாட்டின் மிகப்பெரிய அமிர்தா மருத்துவமனை: பிரதமர் மோடி திறப்பு!

2,600 பெட்… 534 ஐ.சி.யூ… நாட்டின் மிகப்பெரிய அமிர்தா மருத்துவமனை: பிரதமர் மோடி திறப்பு!

Share it if you like it

ஹரியானா மாநிலத்தில், 2,600 படுக்கை வசதிகள், 534 அவசர சிகிச்சைப் பிரிவுகளுடன் கூடிய, நாட்டின் மிகப் பெரிய பன்னோக்கு மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

கேரள மாநிலத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் மாதா அமிர்தானந்தமயி மடம், ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் டெல்லி – மதுரா சாலையில் 130 ஏக்கர் பரப்பளவில் 6,000 கோடி ரூபாய் செலவில், 7 அடுக்கு மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான மருத்துவமனையை கட்டி வருகிறது. மொத்தம் 2,600 படுக்கை வசதிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் 534 அவசர சிகிச்சை பிரிவுகளும் இடம்பெறுகிறது. இந்த மருத்துவமனைக்கு அமிர்தா மருத்துவமனை என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள்  2016-ம் ஆண்டு தொடங்கிய நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக பணியில் சுணக்கம் ஏற்பட்டு, தற்போது வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பன்னோக்கு மருத்துவமனையில் மிகச்சிறந்த நவீன தொழில்நுட்ப வசதியோடு கூடிய ஆராய்ச்சி மையமும் இருக்கிறது. மருத்துவமனை கட்டடத்தின் மேல் மாடியில் ஹெலிகாப்டர் தளமும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனையின் முழு பணிகளும் அடுத்த 5 ஆண்டில் நிறைவடையும்போது, இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாக இது திகழும். முதல்கட்டமாக 500 படுக்கை வசதிகளுடன் செயல்பாட்டு வந்திருக்கும் இந்த மருத்துவமனையின் தொடக்க விழா நேற்று நடந்தது. பிரதமர் மோடி தலைமை வகித்து மருத்துவமனையை தொடங்கி வைத்தார். விழாவில், ஹரியானா கவர்னர் பன்டாரு தத்தாத்ரேயா, மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டர், மாதா அமிர்தானந்தமயி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “உலகமே மாத அமிர்தானந்தமயியை போற்றுகிறது. கடந்த பல ஆண்டுகளாக அவரது அன்பும் ஆசியும் எனக்கு கிடைத்து வருவதை பாக்கியமாகக் கருதுகிறேன். நாட்டின் மீதும் மக்கள் மீதும் அவருக்கு இருக்கும் அக்கறையை நான் உணர்ந்திருக்கிறேன். உடல் நலம் மற்றும் ஆன்மிகம் இரண்டையும் ஒன்றிணைத்து பார்க்கும் தன்மை இந்தியாவிடம் மட்டுமே இருக்கிறது. இதற்கு, கோவிட் காலத்தில் தடுப்பூசி திட்டத்திற்கு ஆதரவாக ஆன்மிகத் தலைவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியதே சிறந்த உதாரணமாகும்.

தொழில்நுட்பம் மற்றும் நவீனமயம் ஆகியவற்றின் கூட்டு முயற்சி மூலம் இந்தியா சுகாதாரத்துறையில் சிறப்பான இடத்தை அடையும். நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த அரசு மிகத் தீவிரமாக செயலாற்றி வருகிறது. இதற்கு மாநில அரசுகளும் இதர அமைப்பினரும் முன்வருவதை உறுதி செய்ய வேண்டும். இந்த மருத்துவமனை நவீனமும், ஆன்மிகமும் கலந்த கலவை. இந்த மருத்துவமனை நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கும் இடமாக மாறும். அன்பு, இரக்கம், சேவை மற்றும் தியாகத்தின் முழு உருவமாக திகழ்பவர் மாதா அமிர்தானந்தமயி. அவர் நாட்டின் ஆன்மிக பாரம்பரியத்தை வழிநடத்தி செல்கிறார்” என்றார்.


Share it if you like it