கோயிலில் ஷூ அணிந்து, வேட்டி அவமதிப்பு: சல்மான்கானை வறுத்தெடுத்த கிரிக்கெட் வீரர்!

கோயிலில் ஷூ அணிந்து, வேட்டி அவமதிப்பு: சல்மான்கானை வறுத்தெடுத்த கிரிக்கெட் வீரர்!

Share it if you like it

கோயிலில் ஷூ அணிந்து நடனமாடியதோடு, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை இழிவுபடுத்தும் வகையில், ஆபாசமாக நடனமாடிய சல்மான் கானுக்கு பிரபல கிரிக்கெட் வீரரான சிவராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தமிழில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 2014-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது வெளியான திரைப்படம் வீரம். இப்படத்தின் ஹிந்தி ரீமேக், ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ என்கிற பெயரில், இயக்குனர் ஃபார்ஹாத் சம்ஜி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படம் ஏப்ரல் 21-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, தெலுங்கு திரைப்பட நடிகர் வெங்கடேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘என்டம்மா’ என்கிற பாடல் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இப்பாடலில் சல்மான் கான், வெங்கடேஷ் ஆகியோருடன் ராம் சரணும் இணைந்து நடனமாடி இருக்கிறார். இப்பாடலில்தான் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாக வேட்டி, சட்டையுடன் 3 பேரும் நடனமாடி இருக்கின்றனர். ஆனால், இப்பாடலுக்கான நடன அமைப்பு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை கொச்சைப்படுத்துவது போலவும், இழிவுபடுத்துவது போலவும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

மேலும், இதன் மூலம் தமிழ்க் கலாசாரம் அவமதிக்கப்பட்டிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இதுகுறித்து பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான லக்ஷ்மி சிவராமகிருஷ்ணன் கூறுகையில், “என்டம்மா பாடலின் நடனக் காட்சிகள் தென்னிந்திய கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையில் இருக்கிறது. இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஆபாசமாக ஆடுவதற்கு இது ஒன்றும் லுங்கி இல்லை, வேட்டி. தமிழர்களின் பெருமைக்குரிய கலாசார உடையை கொச்சைப்படுத்தும் வகையில் காட்டி இருப்பது ஏற்புடையதல்ல” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, இப்பாடல் கோயில் போன்ற இடத்தில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க, கோயிலுக்குள் காலில் ஷூ அணிந்து நடனமாடுவது போல காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. இது ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.


Share it if you like it