தேசியக் கொடியை அவமதித்த பிரஞ்சுகாரர்கள் – புதுவை வரலாறு

தேசியக் கொடியை அவமதித்த பிரஞ்சுகாரர்கள் – புதுவை வரலாறு

Share it if you like it

புதுச்சேரி சுதந்திரப் போராட்டம்

இந்தியாவிற்கு, ஐரோப்பிய நாடுகளிலிருந்து கடல்வழி வாணிபம் செய்ய வந்தவர்களில் பிரெஞ்சுக்காரர்கள் மிக முக்கியமானவர்கள். இந்திய மன்னர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியும், இந்தியாவில் நிலவி வந்த சிற்றரசர்களுக்கு இடையே நிலவிய வேற்றுமைகளைப் பயன்படுத்தி, தங்கள் ஆதிக்கத்தை புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், சந்திரநாகூர் மற்றும் மாஹே பகுதிகளில் நிலைநாட்டினர்.

1742 முதல் 1754 வரை புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு துய்ப்ளே கவர்னராக இருந்த போது, அனந்தரங்கப் பிள்ளை அவரது துபாஷியாக அமர்த்தப் பட்டார். அரசின் நடவடிக்கைகளை, தனது குறிப்பில் எழுதி வைத்திருந்தது, பிரெஞ்சு அரசாங்கத்தின் நடைமுறைகளை தெரிந்து கொள்ள உதவுகிறது. மேலும், பிரெஞ்சுஅரசின் நிர்வாக குறிப்புகள், கடிதங்கள், கட்டுரைகள், அரசாணைகள் நமக்கு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பிரெஞ்சு ஆட்சி நிர்வாகம் பற்றிய குறிப்புகளும் கிடைக்கிறது.

பிரெஞ்சுக்காரர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும், ஆளும் வர்க்கமாகவும் கருதிக் கொண்டு மக்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்தனர். பிரெஞ்சு நீதி மன்றத்தினுள் ஆஜராகும் போது, இந்தியர்கள் காலணிகளை அணியக் கூடாது என்பது விதி. 1873 ல் பொன்னுத் தம்பி பிள்ளை, பிரெஞ்சு மாஜிஸ்ரேட்டு முன் காலணி அணிந்ததால், அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து பாரிஸில் மேல் முறையிட்டில் வெற்றி பெற்றதால் இவர் புகழ் பெருகியது.

வ.வே.சு ஐயர், வாஞ்சிநாதன், நீலகண்ட பிரம்மச்சாரி போன்றோரும் புதுவையில் ஆயுதப் பயிற்சி பெற்றனர். இதனால் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தேசிய இதழ்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வெளியாயின. இதனால் ஈர்க்கப்பட்டு, அன்னிய ஆட்சி முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் ஏற்பட்டது. பாரதியாரின் ‘இந்தியா’ இதழ் அச்சிட்டு வெளிவரத் துவங்கியது. ஆங்கில அரசுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம், பிரெஞ்சு அரசுக்கு எதிராகவும் சுதந்திரப் போராட்டம் நிகழும் என தங்கள் பகுதி மக்களைக் கட்டுப்படுத்தினர். பிரெஞ்சுகாரர்களுக்கு எதிராக நிலவரி, சுங்கவரி, பிரெஞ்சிந்திய ஏகாதிபத்தியத்தின் காலனி கல்வி முறைக்கு எதிராக  குரல் கொடுத்தனர்.

1928 ல் “ஐந்து நண்பர்கள் குழு” பின்னர் “பரஸ்பர சகோதரத்துவ சங்கம்” என்று பெயரிலும் சங்கங்கள் அமைக்கப்பட்டு, பின்னாளில் அரசியல் குறித்த விவாத சங்கங்களாக மாறியது. 1930 ல் “பிரெஞ்சிந்திய வாலிபர் சங்கம்” இரு மாநாடுகளை நடத்தினார்கள். அந்த ஆண்டில் காந்தியடிகளின் “வேதாரண்ய உப்பு சத்தியாகிரக” போராட்டத்தில் நிரவி கோவிந்தசாமி செட்டியார் கலந்து கொண்டதால், அவரை மக்கள் ‘காந்தி செட்டியார்’ என்றே அழைக்க ஆரம்பித்தனர்.

காரைக்காலில் இளம் தலைமுறையினரிடையே எழுந்த தேசிய உணர்வும், சமுதாய உணர்வும் கிளர்ந்தெழுந்தது. காந்தியின் சட்டமறுப்பு இயக்கம் மற்றும் தீண்டாமைக்கு எதிராக பல சமூக சீர்திருத்த இயக்கங்கள் பரவியது. 1933 ல் “ஹரிஜன சேவா சங்கம்” ஆரம்பிக்கப் பட்டு, பல சீர்திருத்த சமூக தொண்டுகளில் ஈடுபட்டனர்.

1934 பிப்ரவரி மாதம் 17, 18 தேதிகளில் மகாத்மா காந்தி புதுவையிலும், காரைக்காலிலும் ஆற்றிய உரை பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்ட வீரர்களை உருவாக்கியது. மகாத்மாவை காரைக்காலுக்கு அழைத்து வந்த பெருமை நிரவி திருநாவுக்கரசுப் பிள்ளை, காந்தி செட்டியார், அரங்கசாமிப் பிள்ளை, அரங்கசாமி நாயக்கர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

பாட்டாளி வர்கத்தினருக்காக வ.சுப்பையா அவர்களால் 1934 ஜூன் மாதம் “சுதந்திரம்” என்ற மாத இதழ் துவங்கப்பட்டது. “மகாஜன சபை” சு.அரங்கசாமி நாயக்கர், சவரி பிள்ளை, லையான்-தே-பழனுர், லியோன் சேன்ழான் ஆகியோர்களால் காரைக்காலிலும் அதன் கிளைத் துவங்கப்பட்டது.

1947 ஆம் ஆண்டு ஜனவரி 6 ம் நாள் நடைபெற்ற பிரதிநிதிச் சபை கூட்டத்தில் சுப்பையா மற்றும் பக்கிரிசாமி பிள்ளையும் பிரான்சின் குடியரசு சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரெஞ்சு ஆதிகத்திலிருந்து விடுவித்து, இந்தியாவுடன் இணைக்கும் முயற்சியில், தீவிரமாகச் செயல்பட்டனர். 1947 மார்சு 13 ஆம் தேதி, பிரெஞ்சிந்திய பிரதேசங்களை உடனடியாக இந்தியாவுடன் இணைக்க, ஸ்ரீகாந்த இராமானுஜம், லியோன் சேன்ழான், அகமது நயினா மரைக்காயர், வெங்கட சபாபதிப் பிள்ளை, சபரிப் பிள்ளை, மாதர் சாகிப் மரைக்காயர், நாகராஜன், ராமநாதன் செட்டியார், ரெங்கசாமிப் பிள்ளை போன்ற தலைவர்களின் கீழ் இயங்கிய காரைக்கால் தேசிய காங்கிரஸ் கட்சி, ஆகஸ்ட் 9ம் தேதி மக்கள் மாபெரும் விடுதலை இயக்க ஊர்வலத்தை நடத்தினர். இதன் விளைவாக பொன்னையா என்.ஜி.ராஜன், மணி, அம்பிகா சுந்தரமூர்த்தி போன்ற கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்களும், பல தொண்டர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி, ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில், காரைக்கால் நகராட்சி அலுவலகத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி, விழா கொண்டாடப்பட்டது. அப்போது திருநள்ளாறு ஊர் தொகுதியின் தலைவரான திரு.அரங்கசாமி நாயக்கர், இந்திய தேசியக் கொடியை அலுவலகத்தில் ஏற்றி விழா எடுத்ததால், வெகுண்ட பிரெஞ்சு அரசினர் அவரைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கினர்.

இந்தியா சுதந்திரம் அடைந்தும் புதுச்சேரி,  காரைக்கால் பகுதி, பிரெஞ்சு ஆட்சியின் கீழ் அடிமைபட்டிருந்தது. பிரெஞ்சிந்திய பகுதிகளின் விடுதலைக்காக, பலரும் பெரும் பங்கு வகித்தனர். குறிப்பாக அரங்கசாமி நாயக்கர், ம.பாலசுப்ரமணியன், P.தாண்டவசாமி, அ.ராமநாதன் செட்டியார், இராம.சீனிவாசன், ஆ.கல்யாணசுந்தரம், N.இராமசாமி பத்தர், பா.கோவிந்தசாமிப் பிள்ளை, கா.மு. சிவசுப்ரமணியம், N.சுப்ரமணிய குருக்கள், வரதராஜலு செட்டியார், கோ.ராமலிங்கம் (எ) ரத்தினவேலு, கதிர்வேலுப் பிள்ளை போன்றோரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் 1946 ஆம் ஆண்டும், 1948 ல் நடைபெற்ற மக்கள் சபை தேர்தலில் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பினார்கள். பிரெஞ்சு இந்தியப் பகுதிகளும் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும் என்பது தான் இவர்களின்  முக்கிய நோக்கமாக இருந்தது. ஆத்திரமடைந்த பிரெஞ்சு அரசு, தொழிலாளர்கள் ஒற்றுமையை குலைத்தது.

அப்போதைய பிரெஞ்சிந்திய ஆளுநர் பரோன், காந்திஜியை சந்தித்து மக்களைச் சமதானப் படுத்தும்படி சொல்லியும், பிரெஞ்சு அரசாங்கமும் பிரெஞ்சிந்திய அரசு கொள்கை அளவில் சுதந்திரத்திற்கு ஒப்புக் கொண்டதையும் தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டார். ஆனாலும், புதுச்சேரி, காரைக்கால், பிரெஞ்சிந்திய பகுதிகளில் ஒர் மந்தமான நிலை 1953 வரை நீடித்தது.

1954 ஆம் ஆண்டில், பிரெஞ்சிந்தியப் பகுதிகளில் அதிலும் குறிப்பாக காரைக்காலில் விடுதலைப் போராட்டங்கள், தீவிரமடைந்தன. இணைப்புக் காங்கிரஸ் தலைவர் ஜோசப் சவரி லாயர் மற்றும் நாகராஜ முதலியார் மக்கள் சபை, முனிசிபாலிட்டி, பஞ்சாயத்து மேயர் மற்றும் மக்கள் வாக்கெடுப்பின்படி பிரெஞ்சிந்தியப் பகுதிகள், இந்திய யுனியனுடன் சேர வேண்டும் என்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இதன்படி, மார்ச் 26 முதல் காரைக்காலில் ஒவ்வொரு வீடுகளிலும், இந்திய தேசியக் கொடியைப் பறக்கவிட வேண்டும் என, வெங்கடாசலபதி பிள்ளை மற்றும் லெயான் சேன்ழான் கேட்டுக் கொண்டனர்.

காரைக்கால் தேசிய இளைஞர் காங்கிரஸ், இராம.சீனிவாசன் தலைமையில் 1954 மார்ச் 28 ல் ஒர் சத்தியாகிரகப் போராட்டம் தொடங்கி, திருநள்ளார் வீதி மற்றும் மாதா கோயில் வீதியில் ஊர்வலம் செல்லும் போது, அதில் கலந்து கொண்ட இளைஞர்கள் மீது பிரெஞ்சு போலிசார் தடியடிப் பிரயோகம் நடத்தினர். அவர்கள் ஏந்திச் சென்ற இந்திய தேசியக் கொடியை பிடித்திழுத்தும், கிழித்தும் அராஜகமான முறையில் பிரெஞ்சிந்திய காவல் துறையினர் நடந்து கொண்டனர்.

பிரெஞ்சு ஆட்சியாளர்கள் மக்களை இந்துக்கள், முகமதியர்கள் என்று பிளவுபடுத்தி பிரெஞ்சிந்திய பகுதிகளில் விடுதலை இயக்கத்தை சீர்குலைக்க முற்பட்டனர். அடக்குமுறையால் பிரெஞ்சிந்திய பகுதிகளில் சமூகம், பொருளாதாரம் மக்களின் மனநிலை போன்றவை சீர்குலைத்து காணப்பட்டது.

பிராந்தியங்களில் பொதுஜன வாக்கெடுப்பு வைக்க வற்புறுத்தியது. பிரெஞ்சிந்திய பகுதி மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் போக்குவரத்தும், (ரயில் மற்றும் பேருந்து) பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டது. காரைக்கால் பகுதிகளுக்கு, விவசாய நீர் தடுக்கப்பட்டது. உலக அரங்கில் பிரெஞ்சு அரசின் பிரதமர் மேண்டே பிரான்ஸ், இலண்டனில் நடந்த மாநாட்டில் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களும் கலந்து கொண்டு, பிரெஞ்சு இந்திய விடுதலை பற்றி பேசினார். ஆனாலும் பிரெஞ்சு அரசோ மக்கள் வாக்கெடுப்பு பிரெஞ்சியரால் நடத்தப்படாமல், அப்பகுதிகளுக்கு சுதந்திரம் அளிக்க முன்வரவில்லை. இதன் விளைவாக பாரிசின் தேசிய சபை, பிரெஞ்சிந்தியப் பிரச்சனை குறித்து விவாதித்து, இந்திய யுனியனுடன் இணைவதை ஒப்புக் கொண்டது.

இதன் விளைவாக, 1954 அக்கோடபர் 18 ம் நாள் வாக்களித்த 178 உறுப்பினர்களில், 170 பேர் பிரெஞ்சியப் பகுதிகள் உடனடியாக இந்திய யுனியனுடன் இணைவதை ஆதரித்ததன் விளைவாக, புதுச்சேரி, காரைக்கால் பகுதியும் இந்தியாவின் ஒரு பகுதியாகியது.

1954 நவம்பர் 1 ம் தேதி புதுச்சேரி, காரைக்கால் நிர்வாக அலுவலகத்திலும், கட்சி அலுவலகங்களிலும், பள்ளிக் கூடங்களிலும் பிரெஞ்சுக் கொடி இறக்கப்பட்டு இந்தியக் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

                                              – முனைவர். அனுராதா


Share it if you like it