இளைஞர் தற்கொலைப் படையை உருவாக்கி ஆங்கிலேயரை நடுங்க வைத்த வாட்டாக்குடி இரணியன்

இளைஞர் தற்கொலைப் படையை உருவாக்கி ஆங்கிலேயரை நடுங்க வைத்த வாட்டாக்குடி இரணியன்

Share it if you like it

வாட்டாக்குடி இரணியன்

வாட்டாக்குடி இரணியன், சாம்பவனோடை சிவராமன் ஆகிய இருவரும் விவசாயக் கூலிக்காகப் போராடி, தங்கள் உயிரை இழந்தவர்கள். வாட்டாகுடி இரணியன் பற்றிய திரைப்படம்  “இரணியன் ” என்ற பெயரில் வெளி வந்தது. பல்வேறு தரப்புகளில் இருந்து வந்த அழுத்தங்கள் காரணமாக இப்படத்தின் பல காட்சிகள் நீக்கப் பட்டது…!

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாக்குடி கிராமத்தில் இராமலிங்கத் தேவர் – தையல் அம்மாளுக்கு, 1920  நவம்பர் 15 அன்று பிறந்த வாட்டாக்குடி இரணியன், இவரது இயற்பெயர் வெங்கடாச்சலம். தனது 13 வது வயதில், உறவினர்களுடன் சிங்கப்பூர் சென்று, கட்டிட வேலையிலும் தோட்டங்களிலும் வேலை பார்த்தார். அங்கெல்லாம் ஆங்கிலேயர்கள், சீனர்கள், மலேசியர்களின் தோட்டங்களில் தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டது கண்டு, மனம் கொதித்தார்.

மலேயா கணபதி, வீரசேனன் ஆகியோருடன் இரணியனுக்கு தொடர்பு கிடைத்தது. நூல் வாசிப்புப் பழக்கம் உருவானது. இந்தியாவுக்கு சுதந்திரம் அவசியம் என்பதனை உணர்ந்து, போராட தீர்மானித்தார். இரகசிய அரசியல்  கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புக் கிட்டியது.

1943ல் சிங்கப்பூர் வந்த வங்கத்துச் சிங்கம், நேதாஜியைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார். ”இரத்தம் தாருங்கள் விடுதலை பெற்றுத் தருகிறேன்” என்று சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில், நேதாஜி வீர முழக்கமிட்டதில் ஈர்ப்படைந்த இரணியன், நேதாஜி அமைத்த “இந்திய தேசிய இராணுவத்தில்” சேர்ந்து பயிற்சியாளராக உயர்ந்தார். சுமார் பன்னிரெண்டாயிரம் தொழிலாளர்களைக் கொண்ட சிங்கப்பூர் துறைமுகத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரானார்.

1946 ல் தொழிற்சங்கத்தின் முடிவுக்கு ஏற்ப, தொழிலாளர்களின் நலனுக்காகப் போராட்டம் நடத்தினார். மலேசிய முதலாளிகளும், ஆங்கிலேயர்களும் போராட்டத்தை ரவுடிகளைக் கொண்டு நசுக்க நினைத்ததை எதிர்கொள்ள, “இளைஞர் தற்கொலைப் படை” ஒன்றை நிறுவினார். இளைஞர்களுக்கு கொரில்லா பயிற்சியும், துப்பாக்கிச் சுடும் பயிற்சியும் கொடுத்தார்.

தனது 28 வது வயதில், இரணியன் தனது சொந்த ஊரான வாட்டாக்குடிக்குத் திரும்பினார். 1947ல் விடுதலையடைந்த இந்தியாவில் நேதாஜிக்கு எதிர் சிந்தனை கொண்டவர்களின் காங்கிரசு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததும், பணக்கார சக்திகள் தொழில் முதலாளிகளாகவும் நிலப் பிரபுக்களாகவும் மாறி இருப்பதையும் கண்டு, இதற்காகவா, இந்திய விடுதலைக்காக நேதாஜி பாடுபட்டார் என்ற கலக்கம், அவருக்குள் உருவானது.

அவரது ஊரான வாட்டாக்குடியில், நிலப் பிரபுக்களின் கொடுமை விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிராக அதிகரித்து இருந்தது. ”சாணிப் பாலும், சவுக்கடியும்”   விவசாயத் தொழிலாளர்களுக்கு இயல்பான தண்டனையாக இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், விவசாயத் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் நண்பர்களுடன் சேர்ந்து, ”விவசாய சங்கம்” ஒன்றை உருவாக்கினார்.

நிலப்பிரபுக்களுடன் மோதி விவசாயத் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தினார். இதை பொறுக்க முடியாத நிலப்பிரபுக்கள், காவல் துறையின் உதவியுடன், இவர் மீது பல வழக்குகளைப் பதிவு செய்து, கைது செய்ய முயன்றனர். மீண்டும் தலைமறைவு வாழ்க்கை, தொடர் கதையானது. நிலப்பிரபுக்களும், முதலாளித்துவ சிந்தனையாளர்களும் காவல்துறையினர் உதவியுடன், இரணியனுடன் தொடர்பு உடையவர்களைக் கொலை செய்யத் தொடங்கினர்.

1950 மே மாதம் 3 ஆம் நாள், இரணியனுடன் இணைந்து செயல்பட்ட சாம்பனோடை சிவராமனை, காவல்துறை சுட்டுக் கொன்றது. வடசேரி காட்டில் மறைந்திருந்த இரணியனை, காவல்துறை நெருங்கியது. காலில் ஏற்பட்ட காயத்தால், அவரால் ஓட முடியவில்லை. இரணியனையும் அவருடன் இருந்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவரையும் வடசேரி சம்பந்தம் என்பவர் காவல்துறைக்குக் காட்டிக் கொடுத்தார்.

1950 ஆம் ஆண்டு மே மாதம் 5  ஆம் நாள், இரணியனையும் ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும் காவல் துறையினர் பிடித்தனர். ஆறுமுகத்தின் மீது வழக்கு ஏதுமில்லை என்பதால், அவரை விடுவித்து, தப்பிக்க காவல் துறையினர் சொன்ன போதும், இரணியனை விட்டுச் செல்ல மறுத்து விட்ட ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும், இரணியனையும் காவல்துறை சுட்டுக் கொன்றது. சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டு உயிர் நீத்த வாட்டாக்குடி இரணியன், சாம்பவனோடை சிவராமன் ஆகிய இருவரின் வீர வரலாறு வருங்கால இளைஞர்களுக்கு சமர்ப்பணம்.


Share it if you like it