அமித்ஷா உயிருக்கு அச்சுறுத்தலா? தி.மு.க. அரசிடம் விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்!

அமித்ஷா உயிருக்கு அச்சுறுத்தலா? தி.மு.க. அரசிடம் விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்!

Share it if you like it

அமித்ஷா சென்னை வருகையின்போது, விமான நிலையத்தில் மின்தடை ஏற்பட்டது குறித்து, விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் பல்வேறு இடங்களை சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை நடத்த பா.ஜ.க. ஏற்பாடு செய்திருக்கிறது. அதன்படி, சாதனை விளக்க முதல் பொதுக்கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 11-ம் தேதி இரவு 9.30 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது, விமான நிலையத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டது.

எனினும், இதை பொருட்படுத்தாத அமித்ஷா காரில் ஏறி கிண்டி நட்சத்திர விடுதிக்கு புறப்பட்டுச் சென்றார். வழியில், ஏராளமான பா.ஜ.க. தொண்டர்கள் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, தொண்டர்களின் வரவேற்பை ஏற்கும் விதமாக காரில் இருந்து கீழே இறங்கி, தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி அமித்ஷா சென்றார். அப்போதும் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதன் காரணமாக, விமான நிலையப் பகுதியே இருளில் மூழ்கியது. இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க. தொண்டர்கள் விமான நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

அதேசமயம், மத்திய உள்துறை அமைச்சர் வருகையின்போது மின்வெட்டு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு மின்வாரியத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும், உள்துறை அமைச்சரின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், மின்வெட்டு ஏற்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின்போது மின்வெட்டு ஏற்பட காரணம் என்ன என்று அறிக்கை அளிக்கும்படி, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.


Share it if you like it