இந்தியாவில் மொத்தம் 25 உயர் நீதிமன்றங்களும், ஒரு உச்ச நீதிமன்றமும் உள்ளது. இங்கு 649 பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும், 27 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகவும் உள்ளனர்.
உச்சநீதிமன்ற நீதிபதியாவதற்கான தகுதிகள் :
ஏதேனும் ஓர் உயர்நீதிமன்றத்தில் குறைந்தது 5 வருடங்களாவது நீதிபதியாக இருந்திருக்க வேண்டும். அல்லது,
ஏதேனும் ஓர் உயர்நீதிமன்றத்தில் குறைந்தது 10 ஆண்டுகள் வழக்குரைஞராக இருந்திருக்க வேண்டும்.
உயர்நீதிமன்ற நீதிபதியாவதற்கான தகுதிகள்:
குறைந்தது 10 ஆண்டுகள் நீதித்துறை பதவி வகித்தவராக இருக்க வேண்டும். அல்லது,
ஏதேனும் ஓர் உயர்நீதிமன்றத்தில் குறைந்தது 10 ஆண்டுகள் வழக்குரைஞராக இருந்திருக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 124 மற்றும் 217 முறையே உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் மற்றும் தகுதிகள் பற்றி கூறுகின்றன. ஆனால் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படும் முறை, பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் குறித்த தெளிவான வரையறைகள் எதுவும் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
உச்ச நீதிமன்றம், 1993ம் ஆண்டில் “உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் எதிர் யூனியன் ஆஃப் இந்தியா” என்ற வழக்கில் தான், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம்(நீதிபதிகள் தேர்வுக் குழு) முறையை அறிமுகப்படுத்தியது. கொலிஜியத்தின் பரிந்துரையின் பேரில் தான் நீதிபதிகளின் நியமனங்களும், பணியிட மாற்றங்களும் மற்றும் பதவி உயர்வுகளும் நிகழும்.
உச்சநீதிமன்ற கொலிஜியம் என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள 4 மூத்த நீதிபதிகள் அடங்கியதாகும்.
உயர்நீதிமன்ற கொலிஜியம் என்பது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் 2 மூத்த நீதிபதிகள் அடங்கியதாகும்.
விடை பெறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே, தனக்கு அடுத்து உள்ள மூத்த நீதிபதியை, புது தலைமை நீதிபதியாக பரிந்துரைப்பார்.
உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்காக, உச்சநீதிமன்ற கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்படுபவர்கள், அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு பின்னரே நியமனம் செய்யப்படுவர்.
மாநிலங்களுக்கு வெளியில் இருந்து தான், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமிக்கப்படுவார். உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்காக, உயர்நீதிமன்ற கொலிஜியத்தால் பரிந்துரை செய்யப்படும் தகுதி வாய்ந்த உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளின் பெயர்கள், உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் ஒப்புதலுக்கு பின்னரே, அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.
உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுவர்.
So useful