மதிய உணவு கிடைக்காததால் பள்ளி மாணவ – மாணவியர்கள் பசியில் வாடிய சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கிளாக்காடு கிராமம் அமைந்துள்ளது. மலைவாழ் சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் இங்குள்ள உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். கிளாக்காடு கிராமம் மட்டுமில்லாமல் வேங்கோடு, கூடாரம், வில்வெற்றி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 250 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
அந்த வகையில், வழக்கமான முறையில் நேற்றைய தினம், மாணவ – மாணவிகளுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், உணவு அனைத்தும் சிறிது நேரத்திற்குள் தீர்ந்து விட்டது. இதனால், 100-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் உணவின்றி பசியில் வாடி இருக்கின்றனர். இதையடுத்து, உணவு கிடைக்காத மாணவர்கள் தங்களது உறவினர் மற்றும் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.
இதையடுத்து, பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் சமையல்காரரிடம் ஏன்? குறைந்த அளவில் உணவு தயார் செய்தீர்கள் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் பெற்றோர்களையும், உறவினர்களையும் சமாதானப்படுத்தி இருக்கின்றனர். அதன்பின்னர், உணவு தயார் செய்து மற்ற மாணவர்களுக்கு மாலை 4 மணிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. சமீப காலமாக அரசு பள்ளி தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் குவிந்து வரும் சூழலில், 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பசியில் வாடி இருக்கும் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.