தமிழக வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
தமிழக அரசு சார்பில், சென்னை மெரினாவில் குடியரசு தினவிழா நடைபெற்றது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், தமிழக அரசின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதன் பிறகு, பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கவர்னர் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அக்கடிதத்தில், “நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. நீண்ட சுதந்திரப் போராட்ட களத்தில் முன்னனி வீரர்களை தவிர, மற்ற பல வீரர்கள், வீராங்கனைகள் பற்றிய வரலாறு அறியப்படாமலே போனது.
ஆகவே, மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாக, அவர்களது வாழ்கையை ஆவணப்படுத்தும் கடமை நமக்கு உள்ளது. எனவே, ஒவ்வொரு பல்கலைக்கழகமும் குறைந்தது 5 சிறப்பு ஆராய்ச்சி மாணவர்களை நியமிக்க வேண்டும். ஆராய்ச்சி மாணவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரரை அடையாளம் காண வேண்டும். இந்த ஆராய்ச்சித் திட்டத்துக்கான ஃபெல்லோஷிப் வழங்கப்படும். இந்த திட்டத்தை முடிக்க ஒரு ஆண்டு கால அவகாசம் வழங்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, குடியரசு தின விழாவில் உரையாற்றிய கவர்னர் ரவி, “நாட்டுக்காக இன்னுயிரை நீத்த வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது. தாய்த்திருநாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரத்தம், வியர்வையால் வீரர்கள் பாதுகாக்கின்றனர். வ.உ.சி., பாரதியார், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோருக்கு மரியாதை செலுத்துவோம். ருக்மணி லட்சுமிதிபதி, குயிலை, அஞ்சளை அம்மாள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துவோம். தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபடுகிறது” என்றார்.