உடைந்தது இண்டியா கூட்டணி ; கம்யூனிஸ்ட் தனித்துப் போட்டி !

உடைந்தது இண்டியா கூட்டணி ; கம்யூனிஸ்ட் தனித்துப் போட்டி !

Share it if you like it

இண்டியா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய லோக் தளம் கட்சிகள் ஏற்கெனவே வெளியேறி உள்ளன. மேலும், மேற்குவங்கத்தின் 42 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதன்காரணமாக அந்த மாநிலத்தில் இண்டியா கூட்டணி உடைந்துள்ளது.

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணியும் காங்கிரஸும் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

இந்த சூழலில் ஜார்க்கண்ட் மாநில இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் மகேந்திர பதக் ராஞ்சியில் நேற்று கூறியதாவது: பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. ஆனால் இண்டியா கூட்டணி சார்பில் ஜார்க்கண்டில் இதுவரை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகூட தொடங்கப்படவில்லை.

வரும் மக்களவைத் தேர்தலில் ஜார்க்கண்டில் தனித்துப் போட்டியிட கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜார்க்கண்டில் மொத்தம் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 8 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் தனித்துப் போட்டியிடும்.

மார்ச் 16-ம் தேதிக்குப் பிறகு எங்களது வேட்பாளர்களை அறிவிப்போம். இவ்வாறு மகேந்திர பதக் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு இண்டியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.


Share it if you like it