அஸ்ஸாமில் கவிழ்ந்த ரயில்!

அஸ்ஸாமில் கவிழ்ந்த ரயில்!

Share it if you like it

அஸ்ஸாமில் பலத்த மழை வெள்ளம் காரணமாக பயணிகள் ரயில் கவிழ்ந்து விட்டது. நல்ல வேளையாக அந்த ரயில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு நின்றிருந்ததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

அஸ்ஸாமில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது. மாநிலத்தின் 20 மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்திருக்கிறது. இந்த வெள்ளத்தால் 5 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் 652 கிராமங்களில் பேரிடரால் 1,97,248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பஜாலி, பக்சா, பிஸ்வநாத், கச்சார், சாரெய்டியோ, தர்ராங், தேமாஜி, திப்ருகர், திமா ஹசாவ், ஹோஜாய், கம்ரூப், கர்பி ஆங்லாங் மேற்கு, கோக்ரஜார், லக்கிம்பூர், மஜூலி, நாகோன், நல்பரி, தாம்பூர், சோனித்பூர் ஆகிய 20 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மற்றும் உடல்குரி, ஹோஜாய் மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 78,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கச்சார் மாவட்டத்தில் 51,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,645 ஹெக்டேர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி இருக்கின்றன.

இதையடுத்து, அஸ்ஸாமில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் 67 நிவாரண முகாம்களை அமைத்து, 32,959 பேரை தங்க வைத்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். பிரம்மபுத்திரா நதியில் நேமாதிகாட்டில் அபாயக் கட்டத்துக்கு மேல் தண்ணீர் செல்கிறது. கோபிலி கம்பூரில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. பல சாலைகள், பாலங்கள் மற்றும் வீடுகள் முழுமையாக அல்லது பகுதியளவிலோ சேதமடைந்திருக்கின்றன. டிமா ஹசாவோ மாநிலத்தின் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல, ஹஃப்லாங்கிற்குச் செல்லும் அனைத்து சாலைகள் மற்றும் ரயில்வே சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. வடகிழக்கு எல்லை ரயில்வே டிமா ஹசாவோவில் லும்டிங் – பதர்பூர் பிரிவில் சேதமடைந்திருக்கிறது. இப்பாதையை மீட்டெடுக்கவும், தெற்கு அசாம், மணிப்பூர், திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய இடங்களுக்கு ரயில் சேவைகளை மீண்டும் தொடங்கவும் ரயில்வே நிர்வாகம் முயற்சித்து வருகிறது.

மேலும், சேதமடைந்த புதிய ஹஃப்லாங் ரயில் நிலையத்தின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன. இந்த ரயில் நிலையம் முற்றிலும் சேரும், சகதிகளாலும், குப்பைகளாலும் மூழ்கி இருக்கிறது. பயணிகள் ரயில் ஒன்று நிலையத்தில் சாய்ந்து கிடக்கிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


Share it if you like it