ஐ.நா. அறிக்கைதான் சரி… பட்டினி குறியீட்டை நிராகரித்த மத்திய அரசு!

ஐ.நா. அறிக்கைதான் சரி… பட்டினி குறியீட்டை நிராகரித்த மத்திய அரசு!

Share it if you like it

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 41.5 கோடி குறைந்திருப்பதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்திருக்கும் நிலையில், உலக பட்டினி குறியீட்டில் இந்தியா 107-வது இடத்தில் இருப்பதாக ஆய்வு கூறியிருப்பதை இந்தியா நிராகரித்திருக்கிறது.

அயர்லாந்து நாட்டின் கன்சர்ன் வேர்ல்ட்வைட் மற்றும் ஜெர்மனியின் வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே ஆகிய அமைப்புகள் இணைந்து, ஆண்டுதோறும் உலக பட்டினிக் குறியீட்டை வெளியிட்டு வருகின்றன. உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் வளர்ச்சி, சரிவிகித உணவு, குழந்தைகள் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமை, சிசு உயிரிழப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து இப்பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வகையில், நிகழாண்டுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 121 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 107-வது இடத்தில் இருப்பதாக கூறியிருக்கிறது. அதாவது, திவாலான இலங்கை, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறிவரும் நேபாளம், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை விட இந்தியா பின்தங்கி இருப்பதாகக் கூறியிருக்கிறது.

அதேசமயம், சர்வதேச வறுமை ஒழிப்பு தினமான நேற்று முன்தினம் (அக்டோபர் 17), இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 41.5 கோடி குறைந்திருக்கிறது என்று ஐ.நா. அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதோடு, இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் என்று இந்தியாவை பாராட்டியும் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம், ஆக்ஸ்ஃபோர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்முயற்சி அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய இந்த அறிக்கையைத்தான் ஐ.நா. வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையின்படி, 2005-06, 2019-21 ஆண்டுகளுக்கு இடையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை 41.5 கோடி குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு, நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான மாநிலமாக பீகார் தொடர்வதாக அறிக்கை கூறுகிறது.

ஆகவே, உலக பட்டினிக் குறியீடு ஆய்வுப் பட்டியலை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், இந்தியாவின் பிம்பத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆய்வு இருக்கிறது. உலக பசி குறியீட்டு அறிக்கை போலி தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. உண்மைக்கு மாறாக வேண்டுமென்றே இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிகப் பெரிய உணவு பாதுகாப்பு திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால், அரசின் முயற்சிகளை இந்த அறிக்கை வேண்டுமென்றே புறக்கணித்திருக்கிறது. இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் வெறும் 3,000 நபர்களை மட்டும் வைத்து இந்த கருத்துக் கேட்பு நடத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it