இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடரும் என்றும், 2022 – 23-ம் நிதியாண்டில் வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.
சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.) மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், “2023-ம் ஆண்டில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடாக திகழும் என்று சர்வதேச செலாவணி நிதியமும், உலக வங்கியும் கணித்திருக்கின்றன. இந்தியாவின் இப்பொருளாதார வளர்ச்சி தொடரும். 2022 – 23-ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், உள்நாட்டு தொழில் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட பொருளாதார கொள்கைகளே இந்தியாவின் பொருளாதாரத்தை நல்ல நிலையில் வைத்திருக்க செய்கின்றன. டிஜிட்டல் கட்டமைப்பு இந்தியாவின் வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு, ஜி20 நாடுகள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.