பாலியல் துன்புறுத்தல், மோடிக்கு எதிராக எழுதினால் பணம்… பாக். தூதரக அதிகாரிகள் மீது பேராசிரியை பகீர்!

பாலியல் துன்புறுத்தல், மோடிக்கு எதிராக எழுதினால் பணம்… பாக். தூதரக அதிகாரிகள் மீது பேராசிரியை பகீர்!

Share it if you like it

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதோடு, இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக எழுதினால் பணம் தருவதாகக் கூறியதாகவும், பேராசிரியை புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழத்தில் பேராசிரியையாகப் பணியாற்றி வருபவர் அவர். அப்பெண்ணுக்கு பாகிஸ்தான் நாட்டின் லாகூரிலுள்ள சீக்கிய குருத்வாராவிற்கு செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இந்த சூழலில், பாகிஸ்தான் நாட்டிலுள்ள ஒரு பல்கலைக்கழத்தில் உரையாற்ற அப்பேராசிரியைக்கு அழைப்பு வந்தது. ஆகவே, டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்குச் சென்று விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறார் அப்பேராசிரியை. அப்போது, ஈத் பண்டிகை முடிந்து மே மாதம் வருமாறு, தூதரக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். ஆனால், தான் அவசரமாகச் செல்ல வேண்டும் என்று அப்பேராசிரியை கூறியிருக்கிறார்.

அப்போது, அங்கிருந்த தூதரக அதிகாரி ஆசிப் என்பவர், விசா ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி, ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு அந்த பேராசிரியைக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்திருக்கிறார். பின்னர், மற்றொரு அதிகாரி வந்திருக்கிறார். இருவரும் சேர்ந்து காலிஸ்தான் இயக்கம், காஷ்மீர் விவகாரம் குறித்து அந்த பேராசிரியையிடம் கேட்டிருக்கிறார்கள். இதன் பிறகு, இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் சமூக வலைத்தளப் பக்கங்களில் கட்டுரைகளை எழுதி பதிவேற்றம் செய்தால், பணம் தருவதாகக் கூறியிருக்கிறார்கள். ஆனால், அப்பெண் இதற்கு உடன்படாததால் விசா தரமறுத்து அனுப்பி இருக்கிறார்கள்.

ஆனாலும், விடாத பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், தொடர்ந்து அந்த பேராசிரியைக்கு மெசேஜ்களை அனுப்பி இருக்கிறார்கள். அதில், பிரதமர் மோடி பற்றி அவதூறாக எழுதினால் பணம் தருவதாகக் கூறிவந்திருக்கிறார்கள். இந்த மெசேஜ்கள் அனைத்தையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொண்ட அந்த பேராசிரியை, இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அக்கடிதத்தில், பாகிஸ்தான் தூதரகத்திலுள்ள ஆசிப் என்கிற அதிகாரி, தன்னிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், பிரதமரைப் பற்றியும், இந்தியாவைப் பற்றியும் அவதூறாக எழுதினால் பணம் தருவதாக கூறியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதையடுத்து, மேற்கண்ட விவகாரம் தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை மூலம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பாகிஸ்தான் தூதரகத்துக்கு வரும் விண்ணப்பதாரர்களிடம், கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், தூதரகங்களுக்கு வரும் நபர்களிடம் தவறாக நடந்து கொள்வதை பொறுத்துக்கொள்ள முடியாது. பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு சில நடைமுறைகள் உள்ளன. இந்திய பெண்ணின் குற்றச்சாட்டு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மேலதிக விசாரணை நடத்தி நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறது.


Share it if you like it