பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா | மீடியான்

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா | மீடியான்

Share it if you like it

பாதகம் செய்பவரை கண்டால்

நீ பயம் கொள்ளலாகாது பாப்பா;

மோதி மிதித்து விடு பாப்பா – பாரதியார்

பாரதியார் கூறிய வரிகளுக்கு ஏற்ப, நமது நாட்டுக்கு எதிராக, யாரேனும் தீங்கு விளைவிக்க முயன்றால், அவர்களை துரத்தி அடிப்பது, நமது ராணுவ வீரர்களின் வழக்கமான கடமைகளில் ஒன்றாகும்.

எல்லா சந்தர்ப்பங்களிலும், நமது ராணுவ வீரர்கள் மக்களுக்கு உறுதுணையாக, சேவகர்களாக, எல்லை காக்கும் நபர்களாக இருந்து வருகின்றனர். ராணுவ வீரர்களின் அயராத உழைப்பினால் தான், நாம் தினமும் மகிழ்ச்சியாக, நமது நாட்களை கழிக்க முடிகின்றது.

நம்மை சுற்றி உள்ள அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் நமக்கு தொந்தரவு தந்த போது, நமது இராணுவ வீரர்கள், அவர்களை வீழ்த்தி, வெற்றி கொடி நாட்டி இருக்கின்றார்கள் என்பதற்கு வரலாறே சான்றாக உள்ளன.

இந்தியா பாகிஸ்தான் யுத்தம்:

இந்தியா – பாகிஸ்தான் இடையே, இதுவரை 1947-48, 1965, 1971, 1999 என நான்கு முறை, யுத்தம் ஏற்பட்டு இருக்கின்றது. இந்த நான்கு முறையும், இந்தியாவே வெற்றி பெற்று உள்ளது.

1947 – 48 போர்:

1947 ஆம் ஆண்டு, இந்தியா – பாகிஸ்தான் பிரிந்தவுடன், பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. அதை பயன்படுத்திக் கொண்டு, பாகிஸ்தான் இந்தியா மீது, போர் தொடுத்தது. நமது இராணுவ வீரர்களின் சாகசத்தால், அந்தப் போரில், இந்தியா வெற்றி பெற்றது.

1965 போர்:

இந்தியாவை ஆக்கிரமிக்க எண்ணி, நமது நாட்டை அபகரிக்க முயன்றது, பாகிஸ்தான். இந்தியாவின் படை பலத்தை, தாங்கிக் கொள்ள முடியாததால், இந்தப் போரிலும், பாகிஸ்தான் தோற்றது.

1971 போர்:

தற்போது இருக்கும் “பங்களாதேஷ்” நாடு முன்பு, “கிழக்கு பாகிஸ்தான்” என அழைக்கப் பட்டது. தற்போதைய பாகிஸ்தான் உடன் சேர்ந்து இருந்த கிழக்கு பாகிஸ்தானுக்கும், மேற்கு பாகிஸ்தானிற்கும் நிறைய பிரச்சினைகள் இருந்து வந்தது.

மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தானிற்கு (பங்களாதேஷ்) சரியான நிதி உதவியும், முழுமையான அங்கீகாரமும் வழங்காமல் இருந்து வந்ததை எண்ணி, வங்காள மொழி பேசும், கிழக்கு பாகிஸ்தான் மக்கள், மிகவும் வருந்தினர். இந்த விவகாரம், விஸ்வரூபம் எடுத்ததனால், இரு நாடுகளுக்கும் போர் ஏற்படும் சூழல் இருந்தது. இதனால், கிழக்கு பாகிஸ்தான் நாட்டினர், பல லட்சம் பேர், இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர்.

இந்தியா, பாகிஸ்தான் மீது போர் தொடுத்தது. அதில் 90 ஆயிரத்து 368 வீரர்கள் சரண் அடைந்தனர். பாகிஸ்தானின் கப்பல் படையில் பாதி, விமானப் படையில் நான்கில் ஒரு பங்கு, இராணுவத்தில் மூன்றில் ஒரு பங்கு என இந்தியாவுடன் ஏற்பட்ட போரில், பாகிஸ்தான் இழந்தது.

உலக வரலாற்றிலேயே, மிக அதிக எண்ணிக்கையில், ஒரு நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், மற்றொரு நாட்டினரிடம் சரணடைவது, அது தான் முதல் முறை, இன்றளவும், எண்ணிக்கையில் அதுவே அதிகமானது.

அந்தப் போரின் மூலமாக, “பங்களாதேஷ்” என்ற ஒரு புதிய நாடு உருவாக்கப் பட்டு, இந்தியா வீரர்கள், பங்களாதேஷ் நாட்டிற்கு, சுதந்திரம் வாங்கிக் கொடுத்தனர்.

சாம் மானேக்சாவின் சமயோகித எண்ணம்:

மார்ச் மாதம் 25 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டு, அன்றைய ராணுவ தளபதி சாம் மானேக்சாவை, அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அழைத்து, பாகிஸ்தானில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து, கேட்டு அறிந்தார். உடனடியாக பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என, இந்திரா காந்தி தெரிவித்தார்.

அதற்கு பதில் கூறிய சாம் மானேக்சா அவர்கள், “விரைவில் பாகிஸ்தானில், மழைக் காலம் தொடங்க இருக்கின்றது. இந்த நேரத்தில் நாம் பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால், நமது இராணுவ வீரர்கள், மழையில் மாட்டிக் கொள்வார்கள், நமது ராணுவ எந்திரங்களும் மழையில் மாட்டிக் கொள்ளும், இப்போது போர் தொடுப்பதை விட, சிறிது காலம் காத்து இருந்து, நாம்  போருக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் சேகரித்தப் பின்னர், நாம் போர் தொடுத்தால், நமக்கு வெற்றி கிட்டும்” என்ற யோசனையைக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “நவம்பர் மாதம் மழை நின்று விடும். ஆறுகளும் வற்றி விடும். மலைகளில் உள்ள பனிப் பாறைகள் உருகி, பாகிஸ்தானுக்கு சீனா உதவும் முயற்சிகளையும், அது தடுத்து நிறுத்தி விடும். தேர்தல் பணிக்காக சென்று இருக்கும், நமது வீரர்களும் வந்து விடுவார்கள், நமது வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, அது நமக்கு, மிகப் பெரிய வெற்றி அடைய,  வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரும்”, எனக் கூறினார்

அந்த நேரத்தில் சாம் மானேக்சா அவர்கள், “விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் பி.சி. லால்”, “கடற்படைத் தளபதி அட்மிரல் நந்தா” போன்ற வீரர்களுடன் இணைந்து, திட்டம் தீட்டி, டிசம்பர் 4 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டு அன்று, விமானப் படை, கப்பல் படை, இராணுவப் படை என முப்படைகளையும் இணைத்து, மும்முனைத் தாக்குதலை, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடுத்தது.

கிழக்குப் பாகிஸ்தானில் உள்ள டாக்கா நகரத்தை நோக்கி, கிழக்கு பிராந்திய ராணுவ கமாண்டர் லெப்டினண்ட் ஜெனரல் ஜே. எஸ். அரோரா தலைமையில், பாகிஸ்தான் டாங்குகள் மீது, தாக்குதல் செய்யப்பட்டு, அது சுக்கு நூறாக நொறுங்கியது.

கராச்சி துறைமுகத்திற்கு சென்ற கப்பல் படை, ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி, பாகிஸ்தான் கப்பல்களை எல்லாம்,  நொறுக்கி தள்ளியது.

விமானப் படை மூலம் வீசப்பட்ட குண்டில், பாகிஸ்தானிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டன.

இதனால் நிலை குலைந்து போன பாகிஸ்தான், டிசம்பர் 16 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் கிழக்குப் பகுதி தளபதி அமீர் அப்துல்லா கான் நியாசி மூலம், சரண் அடைந்தது.

1999 போர்:

பாகிஸ்தானைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், இந்தியாவிற்குள் ஊடுருவி, இந்தியாவைச் சேர்ந்த “கார்கில்” பகுதியை ஆக்கிரமித்தனர். இதனால் வெகுண்டெழுந்த இந்திய இராணுவ வீரர்கள், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி, பாகிஸ்தான் வீரர்களை நிலை குலையச் செய்தனர்.

எனினும் அடங்காத பாகிஸ்தான், இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக, நமது நாட்டு இராணுவ வீரர்கள், துல்லிய தாக்குதல் (Surgical Strike) நடத்தி,  பாகிஸ்தான் வீரர்களை நிராயுதபாணிகளாக ஆக்கினார்கள்.

பொன் விழாக் கொண்டாட்டம்:

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா வெற்றி பெற்ற நாளை, வெகு விமரிசையாக கொண்டாட, மத்திய அரசு தீர்மானித்து இருந்தது. எனினும், முப்படைத் தலைமைத் தளபதியின் எதிர்பாராத திடீர் மரணத்தால், பொன்விழா கொண்டாட்டத்தை, மிகவும் எளிமையாக நடத்த, மத்திய அரசு தீர்மானித்து உள்ளது.

முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் கடைசி காணொளி:

தமிழகத்திற்கு புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, 2021 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, முப்படைத் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் அவர்கள், வீடியோ ஒன்றை பதிவு செய்து இருந்தார். அதில் அவர் கூறியதாவது:

“பாகிஸ்தானை இந்தியா வெற்றி கொண்ட இப்பொன் விழாவில், இந்திய வீரர்களின் துணிச்சலுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 1971 ஆம் ஆண்டு போரை, நாம் வென்றதனை “ஸ்வர்னிம் விஜய் பார்வ்”  என்ற பெயரில் நாம் கொண்டாடி வருகின்றோம். இந்த சந்தர்ப்பத்தில், நமது வீரர்களின் இந்த தியாகத்தை நினைவு கூறும் வகையில், அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்”.

இதற்காக டிசம்பர் 12 முதல் 14 வரை, டெல்லியில் உள்ள “இந்தியா கேட்”டில், பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. நமது வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள, “அமர் ஜவான் ஜோதி” வளாகத்தில், நிகழ்ச்சி நடத்துவது, நமக்கு மிகவும் பெருமைக்கு உரியதாகும். நாட்டு மக்கள் அனைவரும், இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, நமது வீரர்களை நினைத்து, பெருமை கொள்ள வேண்டும். இந்த வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம்” என அவர் கூறி உள்ளார்.

நம்மை அனுதினமும் காத்து வரும், எல்லை சாமிகளாக கருதப்படும், ராணுவ வீரர்களின் நினைவுகளைப் போற்றி, நமது நாட்டை காக்க, தனது இன்னுயிரை நீத்த,  பிபின் ராவத் அவர்களின் கடைசி ஆசையை நிறைவேற்ற, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, பொன் விழாவை வெகு விமரிசையாக கொண்டாடுவோம்…

உதவிய தளம் – https://twitter.com/ANI/status/1469903208034156547

  • அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

Share it if you like it