ஜின்னாவின் பெயரை ஒருநாளும் உச்சரிக்க மாட்டோம்: பாகிஸ்தானுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் ஒவைசி பதிலடி!

ஜின்னாவின் பெயரை ஒருநாளும் உச்சரிக்க மாட்டோம்: பாகிஸ்தானுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் ஒவைசி பதிலடி!

Share it if you like it

ஜின்னாவின் பெயரை ஒருநாளும் உச்சரிக்க மாட்டோம் என்று இந்திய விஷயத்தில் மூக்கை நுழைக்கும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் பி.யூ. அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள் 6 பேர் மட்டும் திடீரென கல்லூரிக்கு ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வரத் தொடங்கினார். ஆகவே, மேற்கண்ட மாணவிகளை ஹிஜாப், புர்கா அணியாமல் வரும்படி கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது. மீறி அணிந்து வந்த மாணவிகளை வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுத்து விட்டனர். இதனால், அந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள் ஹிஜாப், புர்கா அணிந்து வந்தால் நாங்களும் காவித்துண்டு அணிந்து வருவோம் என்று கூறி, ஹிந்து மாணவிகளும், மாணவர்களும் காவித்துண்டு அணிந்து வரத் தொடங்கினர். இப்பிரச்னை மாநிலம் முழுவதுமுள்ள இதர கல்லூரிகளுக்கும் பரவவே, அங்கு பதட்டமான நிலை நிலவியது. இதையடுத்து, ஹிஜாப், புர்கா அணிய தடைவிதித்தது மாநில அரசு. இதை எதிர்த்து இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் கர்நாடக மாநில ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு கூடுதல் அமர்வுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது மாநில அரசு.

இந்த நிலையில்தான், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘ஹிஜாப் அணிந்ததற்காக மாணவிகளை பயமுறுத்துவது முற்றிலும் அடக்குமுறையாகும். இது முஸ்லிம்களை அடக்க நினைக்கும் இந்திய அரசு திட்டத்தின் ஒரு பகுதி என்பதை உலகம் உணரச செய்ய வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிப்புத்துறை துணை அமைச்சர் பரூக் ஹபீப் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், ‘இந்தியாவில் நடப்பது திகிலுட்டும் வகையில் இருக்கிறது. ஹிஜாப் அணிவது தனிப்பட்ட விருப்பம். எந்த ஆடை அணிய வேண்டும் என்பதை தேர்வு செய்யும் உரிமை குடிமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதை கண்டித்துத்தான் அகில இந்திய மஜ்லிஸ் ஏ-இதஹதுல் முஸ்லீமின் கட்சி (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) தலைவர் அசாதுதீன் ஒவைசி பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், ‘இங்கு என்ன பிரச்னை நடக்கிறது என்று பார்ப்பதை விட்டுவிட்டு, உங்கள் நாட்டு பிரச்னைகளை கவனியுங்கள். மலாலா யூசுப்சாய் பாகிஸ்தானில்தான் சுடப்பட்டார். தலிபான்களின் இத்தாக்குதலுக்குப் பிறகு மலாலா வேறு நாட்டிற்கு சென்று படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால், எங்களுடைய மகள்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள், இங்குதான் படிக்கிறார்கள். இது எங்கள் நாடு, எங்கள் வீடு, எங்கள் பிரச்னை. இதில் பாகிஸ்தான் மூக்கை நுழைக்க வேண்டாம். நாங்கள் ஜின்னாவின் பெயரை ஒரு நாளும் உச்சரிக்கமாட்டோம். தவிர, இம்ரான்கான் அரசை எதிர்த்து பலுசிஸ்தானில் தினமும் போராட்டம் நடந்து வருகிறது. ஆகவே, முதலில் பலுசிஸ்தான் பிரச்னைக்கு பாகிஸ்தான் தீர்வு காணட்டும்’ என்று ஆவேசமாகக் கூறியிருக்கிறார் அசாதுதீன் ஒவைசி.


Share it if you like it