ஆள விடுங்கடா சாமி… காந்தி பேரனும் கிரேட் எஸ்கேப்!

ஆள விடுங்கடா சாமி… காந்தி பேரனும் கிரேட் எஸ்கேப்!

Share it if you like it

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட சரத்பவார், பரூக் அப்துல்லா ஆகியோர் மறுத்து விட்ட நிலையில், தற்போது கோபாலகிருஷ்ண காந்தியும் நிராகரித்து விட்டார்.

ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கு ஆளும் பா.ஜ.க. தரப்பில் ஒரு வேட்பாளர் நிறுத்தப்படும் நிலையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்த மேங்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சி செய்து வருகிறார். எனினும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதுதொடர்பாக இன்னும் கருத்துத் தெரிவிக்கவில்லை. இந்த சூழலில், பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக மம்தா பானர்ஜி தலைமையில் டெல்லியில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி கடந்த 15-ம் தேதி ஆலோசனை நடத்தின. அப்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அவரோ, தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு, தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் பரூக் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்தினர். ஆனால், அவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறி விட்டார். இதைத் தொடர்ந்து, காந்தியின் பேரனும், மேற்குவங்க மாநில முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தியின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. இவர் ஏற்கெனவே 2017-ம் ஆண்டு நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட வேண்டும் என்கிற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை கோபாலகிருஷ்ண காந்தியும் இன்று நிராகரித்து விட்டார். இதனால், மம்தா பானர்ஜி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூடாரம் கலகலத்துப்போய் கிடக்கிறது.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரை முடிவு செய்ய மும்பையில் நாளை கூட்டம் நடக்கிறது. தொடர்ந்து, பிற்பகல் 2.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it