அடேங்கப்பா… ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ.16,000 கோடியா?

அடேங்கப்பா… ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ.16,000 கோடியா?

Share it if you like it

கடந்த 2022 – 23-ம் நிதியாண்டில் இந்தியா 15,920 கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்திருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதவில், “கடந்த 2022-23-ம் நிதியாண்டில் இந்தியாவின் ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி 15,920 கோடி ரூபாய் என்கிற வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. 2020 – 21-ம் நிதியாண்டில் ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி 8,434 கோடி ரூபாயாகவும், 2019 – 20-ல் 9,115 கோடி ரூபாயாகவும், 2018 – 19-ல் 10,745 கோடி ரூபாயாகவும் இருந்தது. 2017 – 18-ல் 4,682 கோடி ரூபாயாகவும், 2016 – 17-ல் 1,521 கோடி ரூபாயாகவும் இருந்தது.

எதிர்வரும் 2024 – 25-ம் நிதியாண்டுக்குள் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி 1,75,000 கோடி ரூபாயாக இருக்க வேண்டும். அதேபோல, ஏற்றுமதி 35,000 கோடி ரூபாயாக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும், உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் உத்வேகம் அளிக்கும் தலைமையின் கீழ் எதிர்வரும் காலங்களில் நமது ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதை மேற்கோள் காட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “அற்புதம்! இந்தியாவின் திறமை மற்றும் ‘மேக் இன் இந்தியா’ மீதான ஆர்வத்தின் தெளிவான வெளிப்பாடு இது. கடந்த சில ஆண்டுகளாக இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் நல்ல பலனைத் தருவதை இது காட்டுகிறது. இந்தியாவை பாதுகாப்பு உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எங்களது அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்” என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it