இந்தியாவால்தான் இலங்கைக்கு ஐ.எம்.எப். நிதியுதவி கிடைத்தது – மிலிண்டா மொரகடா!

இந்தியாவால்தான் இலங்கைக்கு ஐ.எம்.எப். நிதியுதவி கிடைத்தது – மிலிண்டா மொரகடா!

Share it if you like it

இந்தியாவால்தான் இலங்கைக்கு ஐ.எம்.எப். நிதியுதவி கிடைத்தது என இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிண்டா மொரகடா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

இலங்கை அரசு கடந்த ஆண்டு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. அப்போது, இலங்கை அரசுக்கு இந்தியா ரூ.32 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கியது. இந்தியா இந்த உதவியைச் செய்யாமல் இருந்திருந்தால் இலங்கை மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கும். குறிப்பாக, இந்தியா நிதியுதவி வழங்கியதால்தான் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) நிதியுதவி இலங்கைக்கு கிடைத்தது.

இலங்கையின் ஒட்டுமொத்த கடன் ரூ .2.46 லட்சம் கோடியாக உள்ளது. இதில் சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடன் மட்டும் ரூ.46 ஆயிரம் கோடி ஆகும். இலங்கையின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு மைனஸ் 7.8% ஆக குறைந்தது. இது இந்த ஆண்டில் மைனஸ் 2% ஆக இருக்கும் என கருதப்படுகிறது. எனவே, நாட்டின் பொருளாதார கொள்கைகளில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டியது அவசியமாகிறது.

மேலும் இந்தியா-இலங்கை இடையிலான உறவை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இதற்காக, இந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரிப்பது உட்பட பல்வேறு முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. கடல் பகுதி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.


Share it if you like it