இந்திய பொருளாதார வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்திய பொருளாதார வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்!

Share it if you like it

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பான இடத்தைப் பிடித்திருப்பதாகவும், அதிவேக வளர்ச்சியடையும் பொருளாதார நாடுகலில் இந்தியாவும் இடம்பெறும் என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 7-வது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த 11-ம் தேதி தொடங்கியது. மாநாட்டை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவிற்கு முன்னணி இடம் கிடைத்திருக்கிறது. மற்ற நாடுகளைவிட சர்வதேச அளவில் இந்தியா சிறப்பான இடத்தை பிடித்திருப்பதாக உலக வங்கி தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜி-20 நாடுகளில் இடம் பெற்றிருக்கும் அதிவேக வளர்ச்சி அடையும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் இடம் பெறும் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்திருக்கிறது.

அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய 3-வது பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று மோர்கன் ஸ்டான்லி என்ற அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும், நடப்பு தசாப்தம் மட்டுமல்லாமல், இந்த நூற்றாண்டே இந்தியாவிற்கானது என்று எம்சிகின்சே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கூறியிருக்கிறார். நிறுவனங்கள் மற்றும் அதன் ஆதரவு குரல்களும், உலகப் பொருளாதாரம் இந்தியா மீது அபரிதமான நம்பிக்கைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது. இதே நிலைப்பாட்டையே சர்வதேச முதலீட்டாளர்களும் கொண்டிருக்கின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, முன்னணி சர்வதேச வங்கி நடத்திய ஆய்வில், சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விரும்பும் நாடாக இந்தியா திகழ்கிறது. அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா இன்று சர்வதேச சாதனைகளை படைத்து வருகிறது என்பதை இங்கு வந்திருக்கும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை பிரதிபலிக்கிறது. 2014-ம் ஆண்டு முதல் தொடர் சீர்திருத்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் முதலீட்டுக்கான பல்வேறு தடைகள் நீக்கப்பட்டிருக்கின்றன. சுகாதாரம், வேளாண்மை, ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்க முயற்சிகளில், இந்தியாவுடன் இணைந்து சர்வதேச அளவிலும் விநியோகச் சங்கிலியை உருவாக்கவதே இலக்கு” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it