இந்திய பெருங்கடலில் 39 பேருடன் மூழ்கிய சீன மீன்பிடிக் கப்பல் மற்றும் லைஃப் ராஃப்ட் ஆகியவற்றை பல்வேறு நாடுகள் தேடியும் கிடைக்காத நிலையில், இந்திய கடற்படையின் P8I விமானம் கண்டுபிடித்து தகவல் தெரிவித்திருக்கிறது.
சீனாவைச் சேர்ந்த Lu Peng Yuan Yu 28 என்கிற மீன்படிக் கப்பல் இந்தியப் பெருங்கடலின் நடுவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தது. இக்கப்பலில் 17 சீனர்கள், 17 இந்தோனேசியர்கள், 5 பிலிப்பைன்கள் உட்பட 39 பணியாளர்கள் இருந்திருக்கிறார்கள். இக்கப்பல் கடந்த 16-ம் தேதி கன்னியாகுமரிக்கு தெற்கே தோராயமாக 1,660 கி.மீ. தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கடலில் மூழ்கியது. இதையடுத்து, சீனா, இலங்கை, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மீட்புக் குழுவினரும், கடற்படையினரும் வரவழைக்கப்பட்டு கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில், மனிதாபிமான அடிப்படையில் இந்திய கடற்படையும், தனது மிக சக்திவாய்ந்த கடல்சார் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பலை வேட்டையாடும் விமானமான Boeing Poseidon (P8I) விமானத்தை தேடுதல் பணியில் ஈடுபடுத்தியது. இந்த விமானம் இரவும் பகலும் செயல்படும் திறன் கொண்டது. மேலும், இவ்விமானத்தில் அதிநவீன சென்சார்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த விமானம் சீன கப்பல் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் பகுதியில் விரிவான சோதனை நடத்தியது. இதில், சீன மீன்பிடி கப்பலை கண்டுபிடித்து, சீன கடற்படை போர்க்கப்பல்களுக்கு தெரிவித்திருக்கிறது.