சொந்த மண்ணிலேயே பாகிஸ்தானுக்கு சவுக்கடி: இந்திய பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் அதிரடி பதில்!

சொந்த மண்ணிலேயே பாகிஸ்தானுக்கு சவுக்கடி: இந்திய பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் அதிரடி பதில்!

Share it if you like it

சொந்த மண்ணிலேயே பாகிஸ்தானுக்கு செருப்படி பதில் கொடுத்திருக்கிறார் இந்தியாவின் பிரபல எழுத்தாளரும், பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல உருது கவிஞரும், எழுத்தாளருமான பயஸ் அகமது பயஸின் நினைவாக, அந்நாட்டின் லாகூர் நகரில் இலக்கிய விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், பாலிவுட் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர், சமீபத்தில் பாகிஸ்தான் சென்றிருந்தார். நிகழ்ச்சியின் முடிவின், கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், “நீங்கள் பாகிஸ்தானுக்கு பலமுறை வந்திருககிறீர்கள். உங்கள் நாட்டுக்கு திரும்பியதும், இங்குள்ள (பாகிஸ்தான்) மக்கள் நல்லவர்கள். இவர்கள் குண்டுகளை மட்டும் போடுவதில்லை, மாலை போட்டு அன்பையும் செலுத்தக் கூடியவர்கள் என்று உங்களுடைய (இந்திய) மக்களிடம் கூறுவீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய ஜாவேத் அக்தர், “ஒருவரை ஒருவர் குறை கூற வேண்டாம். அது ஒருபோதும் பிரச்னைகளை தீர்க்காது. நான் மும்பையிலிருந்து வருகிறேன். மும்பைத் தாக்குதல் பற்றி அனைவருக்கும் தெரியும். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நார்வேயில் இருந்தோ, எகிப்தில் இருந்தோ வரவில்லை. மாறாக, பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள். இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் இன்னமும் உங்கள் (பாகிஸ்தான்) நாட்டில்தான் சுதந்திரமாக உலா வருகிறார்கள். இதற்கு எதிராக இந்தியர்கள் புகார் அளித்திருக்கிறார்கள். ஆனாலும், குற்றவாளிகள் நீதியின் முன்பு நிறுத்தப்படவில்லை. இதுதான் இந்தியர்களின் கோபத்துக்கு காரணமாகும். இந்த கோபம், இந்தியர்களின் இதயத்திலிருந்து நீங்க வேண்டுமானால், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

(கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி கடல் மார்க்கமாக மும்பையில் ஊடுருவிய 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள், ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில், வெளிநாட்டவர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட அப்துல் கசாப் என்கிற பயங்கரவாதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இத்தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சயீத், ஜகியுர் ரஹ்மான் லக்வி உள்ளிட்டோருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.)

மேலும், இந்தியக் கலைஞர்களுக்கு உரிய மரியாதையை பாகிஸ்தான் தருவதில்லை. இதே பாகிஸ்தானைச் சேர்ந்த பயஸ் அகமது பயஸ் இந்தியா வந்தபோது, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடைய நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. அதேபோல, பாகிஸ்தான் பாடகர்கள் நுஸ்ரத் பதே அலிகான், மெஹ்தி ஹாசன் ஆகியோர் இந்தியா வந்தபோது பிரமாண்ட வரவேற்பு அளித்ததோடு, அவர்களது இசைக் கச்சேரிகளையும் நாங்கள் இந்தியாவில் நடத்தினோம். ஆனால், இந்தியாவின் பிரபலமான பாடகி லதா மங்கேஷ்கரின் கச்சேரிகளை பாகிஸ்தான் ஒருபோதும் நடத்தியதில்லை” என்றார். ஜாவேத் அக்தரின் இப்பேச்சை பார்வையாளர்கள் ஆமோதிக்கும் வகையில் கைதட்டி கோஷம் எழுப்பினார்கள்.

அதேசமயம், ஜாவேத் அக்தரின் இப்பேச்சை இந்தியாவிலுள்ள பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில், லாகூரில் ஜாவேத் அக்தர் பேசிய வீடியோவை பதிவேற்றம் செய்து, “நீங்கள் அவர்களின் சொந்த இடத்தில் அவர்களை அடித்தீர்கள்” என்று பாராட்டி இருக்கிறார்.


Share it if you like it