கால்பந்து மைதானத்தில் கலவரம்: 150 பேர் பலி, 200 பேர் காயம்!

கால்பந்து மைதானத்தில் கலவரம்: 150 பேர் பலி, 200 பேர் காயம்!

Share it if you like it

இந்தோனேஷியாவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 150 பேர் பலியாகி இருப்பதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்தோனேஷியாவை பொறுத்தவரை, அரேமா எஃப்.சி. என்கிற அணியும், பெர்சேபயா சுராபயா என்கிற அணியும் பரம எதிரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் போல இரு அணிகளுக்கும் நடக்கும் கால்பந்து போட்டியும் அனல் பறக்கும். வெற்றி பெறுவதற்காக இரு அணியினரும் கடுமையாகப் போராடுவார்கள். அதேபோல, மைதானத்தில் இரு அணி ரசிகர்களும் குவிந்திருப்பார்கள். இதில், எந்த அணி தோல்வியுற்றாலும், அந்த அணியைச் சேர்ந்த ரசிகர்கள் வெற்றிபெற்ற அணியின் ரசிகர்களை தாக்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால், இரு அணிகளுக்கும் போட்டி நடக்கும்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

இந்த நிலையில், இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா பகுதியிலுள்ள கஞ்சுருஹான் விளையாட்டு மைதானத்தில் அரேமா எஃப்.சி. அணிக்கும், பெர்சேபயா சுராபயா அணிக்கும் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. இரு அணிகளுக்குமான போட்டி என்பதால், இப்போட்டியை காண்பதற்கான டிக்கெட் வாங்க மேற்கண்ட இரு அணிகளின் ரசிகர்களும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தும், வேறு நபர்கள் மூலம் டிக்கெட்டை வாங்கி, இரு அணி ரசிகர்களும் மைதானத்தில் குவிந்து விட்டனர். இந்த சூழலில், அரேமா எஃப்.சி. அணி, தனது பரம எதிரியான பெர்சேபயா சுராபயா அணியிடம் தோல்வி அடைந்து விட்டது.

இதையடுத்து, தோல்யடைந்த அணியின் ஆதரவாளர்கள் மைதானத்துக்குள் ஓடி ரகளையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, வழக்கம்போல இரு அணியின் ரசிகர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதைக் கண்ட போலீஸார், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இக்கூட்ட நெரிசலில் மிதிபட்டும், கண்ணீர் புகைகுண்டு வீச்சில் மூச்சு திணறியும் 150 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும தகவல். இவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிர்ப்பலி அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, இந்த கஞ்சுருஹான் விளையாட்டு மைதானத்தில் 38,000 பார்வையாளர்கள் மட்டுமே அமர முடியும் என்றும், ஆனால் சம்பவத்தன்று 42,000 பேர் கூடியிருந்ததாகவும் இந்தோனேஷியாவின் தலைமை பாதுகாப்பு அமைச்சர் மஹ்பூத் எம்டி தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமான கலவரம் குறித்த விசாரணையை தொடங்கி இருப்பதாக தெரிவித்திருக்கும் இந்தோனேஷிய கால்பந்து அமைப்பு, இந்த நிகழ்வு இந்தோனேஷியா கால்பந்து பிம்பத்துக்கு களங்கம் விளைவித்து விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. தவிர, இந்த விசாரணை முடியும்வரை இந்தோனேஷியாவில் கால்பந்து லீக் போட்டிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்க அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ உத்தரவிட்டிருக்கிறார்.

உலகளவில் விளையாட்டு மைதானங்களில் நடந்த மிகவும் மோசமான உயிரிழப்புகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த துயர சம்பவத்தால் அந்நாட்டில் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது.


Share it if you like it