பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதத்தை மோடி அரசு உயர்த்தி அறிவித்திருக்கிறது. அதன்படி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) போன்ற திட்டங்களுக்கு அதிக வட்டி கிடைக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.
அதாவது, 2023 – 24-ம் நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டிற்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதன்படி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தேசிய சேமிப்புச் சான்றிதழின் (SSC) வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. செல்வமகள் சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. கிசான் விகாஸ் பத்திரம் 7.2 (120 மாதங்கள்) சதவிகிதத்திலிருந்து 7.5 (115 மாதங்கள்) சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, குறைந்தபட்சம் 1 வருடத்தில் பி.பி.எஃப்.ல் 500 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். நீங்கள் 1 வருடத்தில் 1.5 லட்சம் ரூபாய் வரை பி.பி.எஃப்.ல் டெபாசிட் செய்தால், வரி விலக்கு கிடைக்கும். இத்திட்டத்தில் முதலீடு 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிறுத்தப்படும். எனினும், நீங்கள் இத்திட்டத்தில் அதிக முதலீடு செய்ய விரும்பினால், 15 ஆண்டுகளுக்குப் பிறகும் முதலீடு செய்யலாம். ஆனால், வருடத்திற்கு ஒரு முறைதான் நீங்கள் பணத்தை எடுக்க முடியும். மேலும், மத்திய அரசு பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியின் பலனை உங்களுக்கு வழங்குகிறது. பி.பி.எஃப். கணக்கில் நீங்கள் எளிதாக கடன் பெறலாம். உங்கள் பி.பி.எஃப். கணக்கில் உள்ள தொகையில் 25% மட்டுமே கடனாகப் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.