சர்வதேச தாய்மொழி தினம்
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. மொழியியல், பாரம்பரிய அறிவு மற்றும் கலாச்சாரங்களைப் பாதுகாக்கவும் பன்மொழிகளை மேம்படுத்துவதற்காகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மொழிகள் மற்றும் பன்மொழியை சமூக உள்ளடக்கம் மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த கருவிகளாகக் கொண்டாடுகிறது.
சர்வதேச தாய்மொழி தின வரலாறு:
வங்காளதேசத்தில் பாகிஸ்தானின் மொழி ஆதிக்கத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தையும் அதில் உயிர்தியாகம் செய்தவர்களை நினைவுக்கூறும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் தேதி மொழி இயக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினத்தை சர்வதேச தாய்மொழி தினமாக அனுசரிக்க வேண்டும் என்று வங்காளதேசம் ஐநா சபையில் கோரியது. வங்காளதேசம் எடுத்த முயற்சியின் அடிப்படையில் 1999ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஐநா சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவின் பொது மாநாட்டில் பிப்ரவரி 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் ஐநா பொதுச் சபை 2002 ஆம் ஆண்டு இந்த அறிவிப்பை வரவேற்று தீர்மானத்தை நிறைவேற்றியது.
மேலும் 2007ம் ஆண்டு மே 16ம் தேதி ஐநாவின் பொதுச் சபை அதன் தீர்மானமானத்தில் உலக மக்கள் பயன்படுத்தும் அனைத்து மொழிகளின் பாதுகாப்பை ஊக்குவிக்க உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது. அதே தீர்மானத்தின் மூலம், ஐநா பொதுச் சபை 2008ம் ஆண்டை சர்வதேச மொழிகளின் ஆண்டாக அறிவித்தது.
சர்வதேச தாய்மொழி தினம், மொழிகள் மற்றும் பன்மொழிகள் சேர்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை அங்கீகரிக்கிறது.
அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான சர்வதேச தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “பல்மொழிக் கல்வி – மாற்று கல்விக்கான அவசியம்” என்பதாகும்.
இதன் மூலம் ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு, தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கிறது. கல்வி கற்கும் குழந்தைகள் தாய்மொழியில் முதலில் கல்வி பயின்று பின்னர் படிப்படியாக மற்ற மொழிகளில் புலமை பெறுவதே இதன் நோக்கம். இதனால் கல்வி கற்றல் சிறப்பாக இருக்கும்.
பாரதத்தில் தாய்மொழி கல்வியின் அவசியம்:
உலகின் பெரும்பாலான நாடுகளில் குழந்தைகள் தாய்மொழியில் தான் கல்வி கற்று வருகின்றனர். ஆனால் உலகிலேயே அதிக மொழிகள் கொண்ட, உலகின் பழமையான மொழிகள் கொண்ட நாடான நம் பாரத தேசத்தில் ஆங்கில வழிக்கல்வி பரவலாக உள்ளது. தாய்மொழி கல்வி பின் தங்கியுள்ளது.
இதனால் இளம் தலைமுறையினர் தங்கள் தாய்மொழியில் ஆர்வம் செலுத்துவதில்லை. பெற்றோரும் இதை ஊக்குவிப்பதில்லை. இதனால் தாய் மொழியை பிழையில்லாமல் பேசவோ எழுதவோ திணறும் அவல நிலை உள்ளது. இந்த நிலை நீடித்தால் நாம் பல மொழிகளை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்.
இதை தடுக்க தாய் மொழி கல்வியின் அவசியத்தை நம் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. தனது புதிய தேசிய கல்விக்கொள்கையில் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020ல் தாய்மொழி அடிப்படையிலான கல்வியை ஆரம்ப நிலை முதல் உயர்கல்வி வரை பரிந்துரைக்கிறது.
சமீபத்தில் மத்தியபிரதேச மாநிலத்தில் தாய்மொழியில் மருத்துவப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நம் நாட்டில் வசிக்கும் லட்சக்கணக்கான பழங்குடியினரின் பாரம்பரிய மொழிகள் இன்று அழியும் நிலையில் உள்ளது. இதை தடுக்க பழங்குடியின குழந்தைகளுக்கு தாய்மொழியில் கல்வி கற்பிப்பது அவசியமாகிறது. தற்போது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் மொழியின் நிலை:
உலகின் ஆதிமொழியாக கருதப்படும் நம் தமிழ் மொழி இன்று உலகமயமாக்கல், ஆங்கில மொழியின் ஆதிக்கம் காரணமாக கடும் பின்னடவை சந்தித்து வருகிறது. தமிழ் மொழியின் காப்பாளர்கள் என கூறி வரும் திராவிட கட்சியினர் அதை அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். தாய்மொழியை பாதுகாக்கும் பொறுப்புணர்வு அவர்களிடம் துளியும் இல்லை.
இன்று ஆரம்ப கல்வி பயிலும் மாணவர்களில் பலருக்கு அடிப்படை எழுத்துக்கள் கூட சரியாக தெரிவதில்லை. பட்டப்படிப்பு முடித்தவர்களில் பலர் இன்னும் எழுத்துக்கூட்டி படிக்கும் நிலையில் தான் உள்ளனர். இந்த உலகையே ஆட்சி செய்த தமிழ் மொழி இன்று சொந்த மக்களால் கைவிடப்பட்டு வருகிறது.
இந்த நிலை மாற தாய்மொழிக் கல்வியே சிறந்த தீர்வாகும். தாய்மொழி கல்வியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும். ஆங்கில மோகத்தில் இருந்து வெளிவர வேண்டும். தாய்மொழியில் பேசுவதையும் பிழையில்லாமல் எழுதுவதையும் படிப்பதையும் தங்கள் கவுரவமாக கருத வேண்டும். உலக தாய்மொழி தினமான இன்று மக்களிடம் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.