ஈரான் ஹிஜாப் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ‘பகீர்’!

ஈரான் ஹிஜாப் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ‘பகீர்’!

Share it if you like it

ஈரான் ஹிஜாப் போராட்டத்தில் பெண்களின் தலை, மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக பகீர் தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இஸ்லாமிய நாடான ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் என்கிற நடைமுறை இருந்து வருகிறது. மேலும், இஸ்லாமிய சட்டதிட்டங்களை பெண்கள் முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க கலாசார காவல்துறை என்கிற சிறப்புப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சிறப்பு காவல் பிரிவினர், முறையாக ஹிஜாப் அணியாத பெண்கள், இஸ்லாமிய சட்டதிட்டங்களை முறையாக கடைப்பிடிக்காத பெண்களை கைது செய்வது, தாக்குவது, அபராதம் விதிப்பது என்பன போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த மாஷா அமினி என்கிற 22 வயது இளம்பெண், தங்களது உறவினரை பார்ப்பதற்காக கடந்த செப்டம்பர் மாதம் தலைநகர் தெஹ்ரான் நோக்கி தனது குடும்பத்தினருடன் காரில் வந்தார். அப்போது, அப்பெண் முறையாக ஹிஜாப் அணியாததாகக் கூறி, கலாசார காவல் பிரிவினரால் தாக்கப்பட்டதோடு, கைதும் செய்யப்பட்டார். காவல் நிலையத்திலும் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட அவர், கோமா நிலைக்குச் சென்று உயிரிழந்தார். இச்சம்பவம் குர்திஸ்தான் மட்டுமின்றி ஈரான் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து, மாஷா அமினியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட பெண்கள் ஹிஜாப்பை கழட்டி வீசியும், தீவைத்து எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இப்போராட்டம் நாடு முழுவதும் காட்டுத்தீபோல பரவியது. நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை எரித்தும், தலைமுடியை கத்தரித்து எறிந்தும், மேலாடை இன்றியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்களும், பெண்ணுரிமைப் போராளிகளும், ஆண்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால், போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. போராட்டத்தின்போது அரசுக்குச் சொந்தமான கார்கள் உள்ளிட்ட வாகனங்கள், போலீஸாரின் வாகனங்கள், பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டனர்.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது ஈரான் அரசு. போராட்டக்காரர்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தினர் போலீஸார். மேலும், போராட்டக்காரர்களை குருவியை சுடுவதுபோல சுட்டுத்தள்ளினார்கள். இதில், பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். குறிப்பாக, அந்நாட்டின் பிரபல சமையல் கலை வல்லுனர் மெஹர்ஷாத் ஷாஹிதி போலீஸாரால் கொல்லப்பட்டார். ஆனாலும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நாளுக்குநாள் போராட்டம் விரிவடைந்ததே தவிர, கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், இறங்கி வந்த அந்நாட்டு அரசு, கலாசார பிரிவு காவல்துறையை கலைப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. எனினும், ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில்தான், ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்த பகீர் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்களின் தலை, மார்பு மற்றும் பிறப்புறுப்பு ஆகிய பகுதிகளை குறிவைத்து போலீஸார் துப்பாக்கியால் சுட்டிருக்கும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதாவது, ஈரான் ஹிஜாப் போராட்டம் பற்றியும், அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு பற்றியும் பிரிட்டன் நாட்டின் ‘தி கார்டியன்’ பத்திரிகை ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. அச்செய்தியில், ஈரான் போராட்டத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த ஒரு டாக்டர் கூறியதாக சில தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதுதான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, ஈரான் ஹிஜாப் போராட்டத்தின்போது காயமடைந்த பல பெண்களுக்கு நான் சிகிச்சை அளித்தேன். அப்போதுதான் ஒரு விஷயத்தை கவனித்தேன். இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. காயமடைந்த பெண்கள் அனைவருமே தலை, மார்பு மற்றும் பிறப்பு ஆகிய இடங்களை குறிவைத்து சுடப்பட்டிருக்கின்றனர். அதுவும், துப்பாக்கி குண்டை பயன்படுத்தாமல் பால்ரஸ் குண்டுகளை பயன்படுத்தி சுட்டிருக்கிறார்கள். சில பெண்களுக்கு மார்பகத்தில் இருந்த பால்ரஸ் குண்டுகளையும், சில பெண்களுக்கு தொடைப்பகுதியில் இருந்த பால்ரஸ் குண்டுகளையும் அகற்றினேன். அதேசமயம், ஒரு பெண்ணுக்கு பிறப்புறுப்பில் ஆழமாக இரு குண்டுகள் பாய்ந்திருந்தன. இதை எடுக்க மிகவும் சிரமப்பட்டோம் என்று கூறியிருக்கிறார்.

இந்த தகவல் தற்போது போராட்டக்காரர்கள் மத்தியில் பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் அரசின் மீது கடும் அதிருப்தியும் ஆவேசமும் அடைந்திருக்கிறார்கள். ஆகவே, ஈரானில் போராட்டம் மீண்டும் சூடுபிடிக்கும் என்று கூறப்படுகிறது.


Share it if you like it