பேட்மின்ட்டன் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனையிடம் ஹிஜாப் அணிய வேண்டும் என்று ஈரான் அரசு கட்டாயப்படுத்தி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இஸ்லாமிய நாடான ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும். இதை கண்காணிக்க கலாசார காவல்படை என்ற சிறப்பு காவல்பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது. இப்பிரிவு போலீஸார் விதிமுறைகளை மீறும் பெண்களுக்கு கடும் தண்டனை வழங்குவது போன்ற அடக்குமுறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி என்கிற 22 வயது இளம்பெண், கடந்த செப்டம்பர் மாதம் தனது உறவினரை பார்ப்பதற்காக தலைநகர் தெஹ்ரான் நோக்கி தனது குடும்பத்தினருடன் காரில் வந்தார். அப்போது, அவர் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று சொல்லி கலாசார காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் போலீஸார் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பெண் உயிரிழந்தார். இது ஈரான் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஈரான் அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும், ஹிஜாப் அணிய மறுத்தும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள், மனித உரிமை ஆர்வலர்கள், பெண்ணுரிமைப் போராளிகள் உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரான் அரசு எவ்வளவோ அடக்குமுறைகளை கையாண்டும், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை சுட்டு வீழ்த்தியும் மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பணிந்த ஈரான் அரசு, கலாசார பிரிவை கலைப்பதாக அறிவித்தது. எனினும், ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், ஈரான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச வீராங்கனையான எல்னாஸ் ரெகாபி என்பவர், தென்கொரியாவில் நடைபெற்ற சர்வதேச தடையேறுதல் போட்டியில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்றார். எனவே, போட்டி முடிந்து திரும்பிய எல்னாஸ் மீது ஈரான் அரசு மிகக் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. எல்னாஸ் வீட்டையும் இடித்து தரைமட்டமாக்கிய அந்நாட்டு அரசு, அவரது பதக்கங்களையும் சாலைகளில் தூக்கி வீசியது.
இந்த நிலையில்தான், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உலகளவிலான பேட்மின்ட்டன் போட்டி நடந்தது. இப்போட்டில் இளம் இந்திய பேட்மின்ட்டன் வீராங்கனையான கர்நாடகாவின் தன்யா ஹேமந்த் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். இவர், விருது வாங்கும்போது, ஹிஜாப் அணிந்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்த விசாரணையில், தன்யா விருது பெறுவதற்கு முன்பு ஹிஜாப் அணியுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் கட்டாயப்படுத்தப்பட்டது தெரியவந்திருக்கிறது. அதேபோல, ஆண்கள் வீரரின் தந்தையாகவோ அல்லது பயிற்சியாளராகவோ இருந்தாலும், பெண்கள் விளையாட்டை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை. மைதானத்தின் நுழைவு வாயிலில் ‘ஆண்களுக்கு அனுமதி இல்லை’ என்று எழுதப்பட்ட பலகை தொங்கவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம்தான் தற்போது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
ஈரான் அந்நாட்டு மக்களுக்கு எந்த கட்டுப்பாடுகளை வேண்டுமானாலும் விதிக்கட்டும். அதை யாரும் கேட்கப்போவதில்லை. அதேசமயம், பிற நாடுகளில் இருந்து வரும் மக்களையும் தங்களது நாட்டு சட்டப்படிதான் நடக்க வேண்டும் என்று கூறுவது ஏற்புடையதல்ல என்று பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ, உள்ளூர் பெண்களையே ஈரான் அரசால் ஹிஜாப் அணிய வைக்க முடியவில்லை. இதில், வெளிநாட்டு மக்களை ஹிஜாப் அணியச் சொல்லி கட்டாயப்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.