அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா, டெல்லியில் உள்ள ஏஜென்சியின் தலைமையகத்தில் விசாரணைக்கு வருமாறு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியது. சம்மனை பொருட்படுத்தாமல், மார்ச் 28 ஆம் தேதி இன்று தனது கிருஷ்ணாநகர் தொகுதியில் பிரச்சாரம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இதனால் மூன்றாவது முறையாக சம்மனை நிராகரித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யாக இருந்த மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராககேள்வி கேட்க, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் அவர் லஞ்சம் வாங்கியதாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக நடந்த விசாரணைக்குப் பிறகு மொய்த்ரா எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் மஹுவா மொய்த்ராவும், துபாயில் வசிக்கும் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகத்திலிருந்து புதிய சம்மன்களைப் பெற்றனர். முன்னதாக அவர் விசாரணைக்காக பிப்ரவரி 19 மற்றும் மார்ச் 11 ஆகிய தேதிகளில் புலனாய்வாளர்களுக்கு முன் ஆஜராகத் வேண்டி சம்மன் அனுப்பியது, ஆனால் மஹுவா மொய்த்ரா அதனை புறக்கணித்து விட்டார்.
அமைச்சரைவையில் கேள்வி எழுப்ப நிதி பெற்றதால் நெறிமுறையற்ற நடத்தை காரணமாக மக்களவையில் இருந்து டிசம்பரில் மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டார். தற்போது வரவிருக்கும் தேர்தலில் மீண்டும் மேற்கு வங்கத்தில் உள்ள கிருஷ்ணாநகர் தொகுதியில் இருந்து அவர் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை எம்பி நிஷிகாந்த் துபே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு, மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்த சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் புதிய சம்மன் மஹுவா மொய்த்ராக்கு அனுப்பப்பட்டது.