தாமிரபரணி என்றும் பொருநை என்றும் அழைக்கப்படும் தென்பாண்டி நதியினை சிறப்பிப்பதற்காக 144 வருடங்களுக்கு ஒரு தடவை மகா புஷ்கரம் எனும் சமய விழாவினை நடத்துவது வழக்கம். அவ்வாறான விழாவினை 2018-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடத்திட முன்னெடுக்கும் வேளையில் பொதுவுடமைவாதிகளும் திராவிட இயக்கவாதிகளும் அவ்விழா நடத்துதலை எதிர்த்தனர். அவர்களது எதிர்ப்பிற்கு காரதணமாக கூறப்பட்டது பிஷப் கால்டுவெல் எழுதியுள்ள திருநெல்வேலி மாவட்ட வரலாறு எனும் நூலில் அவ்வாறான விழா இதற்கு முந்தைய 1874-ம் வருட காலகட்டத்தில் (2018-144=1874) நடத்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே தற்போது கொண்டாட முயற்சிக்கும் புஷ்கார விழா சரித்திர பூர்வமானது அல்ல என்று வாதிட்டனர். திராவிட குருவாக பெருமைப்படுத்தப்படும் கால்டுவெல் எழுதியுள்ள அனைத்து நூல்களும் சரித்திரச் சான்று உள்ளவைகள்தானா என பார்க்கலாம்.
அன்னார் எழுதியுள்ள “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் (முதல் பதிப்பு) நூலில், பக்கம் 85-ல் திருக்குறள் கிபி 9-ம் நூற்றாண்டில் தோன்றியது என பல்வேறு ஆதாரங்களை சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார். ஆனால் அந்நூல் அவ்வளவு பிற்காலத்தில் சார்ந்தது அல்ல என்றும் அதன் உண்மையான தோற்றம் கிமு முதலாம் நூற்றாண்டு என தமிழக அரசு நியமித்த தமிழ் வல்லுநர்கள் குழு முடிவு செய்தது, அதனை தமிழ் கூறும் நல்லுலகமும் ஏற்றுக்கொண்டாகி விட்டது. கால்டுவெல்லின் கருத்து நிராகரிக்கப்பட்டது. கால்டுவெல் கூறியுள்ளது போன்று வள்ளுவர் கிபி 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்தார் எனில் அவர் எவ்விதம் கிபி முதலாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த இயேசு பிரானின் சகோதர்ர் புனிதர் தாமஸை சந்தித்திருக்க முடியும்? திருக்குறள் இயேசு பெருமானின் கருத்துக்களை பிரதிபளிப்பதாக கூறபடுவதில் எள்ளளவும் உண்மையில்லை.
இறைவனை “அகர முதலானை அணி ஆப்பனூரானை” என்று திருஞான சம்பந்தரின் தேவாரம் தெரிவிக்கின்றது. “அகர முதல எழுத்தெல்லாம் ஆதிகபகவன் முதற்றே உலகு” என்று திருக்குறளின் முதல் பாவும் கூறுகின்றது. எழுத்துகளுக்கெல்லாம் அகரம் முதல் எழுத்தாக வருவது போன்று உலகிற்கெல்லாம் ஆதிபகவானே (சிவபெருமானே) முழுமுதற் கடவுளாக விளங்குகின்றார் என்பதே இப்பாடலின் பொருளாகும். உலக மொழிகள் அனைத்தும் அகரத்தையே முதல் எழுத்தாக / வாக்கியமாக கொண்டுள்ளது என்றும் பொருள் கொள்ளலாம். இதனை யோவான் எழுதியுள்ள சுவிசேஷத்தில் (1:1-3) “ஆதியில் ஒரு வார்த்தை இருந்தது, அது இறைவனாய் இருந்து, அவரே உலகம் முழுமையையும் படைத்தவர்” எனும் வசனத்துடன் ஒப்பிட்டு திருக்குறளை கிறிஸ்துவ நூலாக புனைய முயற்சிகள் கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவை உண்மைதானா அல்லது உண்மைக்கு புறம்பானதா என இங்கே பார்க்கலாம்.
இயேசு கிறிஸ்து ஒரு யூத வம்சத்தவர். யூதர்களின் தாய்மொழி ஹீப்ரு (Hebrew). ஹீப்ருவில் மொத்தம் 22 எழுத்துக்கள். அவை ஒவ்வொன்றும் சங்கீதம் 33:4-6 பிரகாரம் உலகை தோற்றுவிக்க இறைவனால் உபயோகப்படுத்தப்பட்டன. அவற்றிலும் இரண்டாவது எழுத்தாகிய பெட் எனும் (பிராக்கா) வார்த்தையை உபயோகித்து கர்த்தரால் உலகம் உண்டாக்கப்பட்டது. முதல் எழுத்து அலிப் என்பது (அகரம்) உபயோகபடுத்தப்பட்டால் அதன் பொருள் சபிக்கப்பட்டவர் என்று பொருள்படும் (பார்க்கவும் பக்கம் 168, Veda and Torah by Barbara A. Holdage, Satguru Publications, Delhi (State University of Newyork). எனவே இயேசு பிரானின் தாய் மொழியில் “அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு” என்ற செய்யுளில் உள்ள வார்த்தை அதன் முழு பொருளையும் வழங்க முடியாமல் ஆகிவிட்டது. அகரத்திற்கும், உலகிற்கும், இறைவனுக்கும் சம்பந்தமில்லாமல் ஆகிவிட்டது. திருக்குறளுக்கும் பைபிளுக்கும் சற்றும் தொடர்பு இல்லாதது இதன் மூலம் தெரியவந்துள்ளது. எனவே திருக்குறள் எவ்விதத்திலும் கிறிஸ்துவ நூல் அல்ல. அவ்வாறு நினைத்தாலும், கூறினாலும், எழுதினாலும் மடமையானது.
- உமரி காசிவேலு