பாரம்பரிய இசை, நடனத்துடன் ஈஷாவில் தீபாவளி கொண்டாடிய பழங்குடி மக்கள்!
கோவை ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள பல்வேறு மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் (நவம்பர் 4) தங்கள் குடும்பத்தினருடன் வந்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மடக்காடு, முள்ளங்காடு, தாணிக்கண்டி, பட்டியார் கோவில்பதி, பச்சான் வயல்பதி, பெருமாள் கோவில்பதி, நல்லூர்பதி, சீங்கபதி, வெள்ளப்பதி, சாடிவயல்பதி உள்ளிட்ட பழங்குடி கிராமங்களில் வாழும் மக்கள், தாம்பூல தட்டுக்களை கரங்களில் ஏந்தி சர்ப்பவாசலில் இருந்து ஆதியோகி வரை ஊர்வலமாக நடந்து வந்தனர்.
பின்னர், சாரல் மழை தொடங்கிய அருமையான மாலை வேளையில், ஆதியோகி சிலை முன்பாக தங்களுடைய பாரம்பரிய இசை வாத்தியங்களை இசைத்து, உற்சாகமாக நடனம் ஆடி மகிழ்ந்தனர். மேலும், அமாவாசை தினம் என்பதால், யோகேஸ்வர லிங்கம் மற்றும் சப்தரிஷிகளுக்கு பூ மற்றும் பழங்களை அர்ப்பணித்து, ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர்.
இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தீபாவளியை முன்னிட்டு ஈஷாவை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் பழங்குடியினர் ஆதியோகியை தரிசனம் செய்தனர். மேலும் யோகேஸ்வர லிங்கம், சப்தரிஷிகளுக்கு பூஜை செய்தனர். துடிப்பான இசை, பாரம்பரிய நடனத்துடன் எங்கள் அக்கம் பக்கத்து உறவினர்கள் எங்களுடன் தீபாவளி கொண்டாடியதில் மகிழ்ச்சி!” என அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.