மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத். காங்கிரஸ் மூத்த தலைவரான இவர் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிட்டு 9 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது சிந்த்வாரா தொகுதி எம்.பி.யாக கமல்நாத்தின் மகன் நகுல்நாத் செயல்பட்டு வருகிறார்.
அதேவேளை, கடந்த ஆண்டு நடந்த மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இதனால், கமல்நாத் மீது கட்சி மேலிடத்தில் அதிருப்தி நிலவி வந்தது.
இதனிடையே, மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவேண்டுமென கமல்நாத் காங்கிரஸ் மேலிடத்தில் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது. ஆனால், அந்த கோரிக்கையை காங்கிரஸ் தலைமை ஏற்கவில்லை. கமல்நாத்திற்கு எம்.பி. சீட் கொடுக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது.
இந்நிலையில், கமல்நாத் தனது மகன் நகுல் மற்றும் சில காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க.வில் சேர்வதற்காக கமல்நாத் தனது மகனுடன் நேற்று டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இன்று அல்லது அடுத்த சில தினங்களில் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.