மதவாத அரசியலை செய்து வருவதே காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகள்தான் – வானதி சீனிவாசன் !

மதவாத அரசியலை செய்து வருவதே காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகள்தான் – வானதி சீனிவாசன் !

Share it if you like it

‘இண்டி’ கூட்டணியில் உள்ள கட்சிகள் சிறுபான்மையினரின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. மாறாக அவர்களை பெரும்பான்மைக்கு எதிராக சித்தரித்து வாக்குகளை மொத்த அறுவடை செய்வதுதான் ‘இண்டி’ கூட்டணி கட்சிகளின் நோக்கம் என்று இண்டி கூட்டணியை விமர்சித்து கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக வானதி சீனிவாசன் அறிக்கையில்,

சிறுபான்மையினர் வாக்குகளை மொத்த அறுவடை செய்ய மதவாத அரசியலை செய்து வருவதே காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகள்தான்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்து விடுவார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும்” என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். உடனே மதச்சார்பின்மை என்ற பெயரில், இந்து மதத்தை மட்டும் எதிர்க்கும் போலி மதச்சார்பின்மை பேசுபவர்கள் அனைவரும் பதற்றத்தில், தேர்தல் பிரசாரத்தில் மதத்தைப் பற்றி பேசுவதா என்று பாடம் எடுக்க தொடங்கியுள்ளனர்.

பிரதமர் மோடி அவர்கள் அரசியலில் அரை நூற்றாண்டு அனுபவம் மிக்கவர். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று முறை, மக்களவைத் தேர்தலில் இரண்டு முறை என தொடர்ந்து ஐந்து முறை பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மையை பெற்றுத் தந்தவர். தொடர்ந்து மூன்றாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருப்பவர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள நாட்டை துண்டாடும் அபாயகரமான அம்சங்களையும், 2006ம் ஆண்டு அன்றைய பிரதமர் மன்மோகன்சிங், சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர், வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் அதிகாரம் பெறுவதை உறுதிசெய்ய, புதுமையான திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்” என்று பேசியதையும் தான் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். இதில் என்ன தவறு இருக்கிறது?

சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காக இந்துக்கள் – சிறுபான்மையினர் இடையே
மோதலை ஏற்படுத்தும் மதவாத அரசியலை செய்து வருவதே காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,
திமுக, சமாஜ்வாடி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் போன்ற இண்டி
கூட்டணியில் உள்ள கட்சிகள்தான். இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து கூறு போடுவதும், சிறுபான்மையினர் வாக்குகளுக்காக அவர்களை தாஜா செய்யும் அரசியல்தான் இங்கு காலங்காலமாக நடந்து வருகிறது.

அதே நேரத்தில் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள கட்சிகள் சிறுபான்மையினரின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. மாறாக அவர்களை பெரும்பான்மைக்கு எதிராக சித்தரித்து வாக்குகளை மொத்த அறுவடை செய்வதுதான் ‘இண்டி’ கூட்டணி கட்சிகளின் நோக்கம்.
அதை சிறுபான்மையினர் புரிந்து கொண்டதால்தான் அவர்களின் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் குறிப்பாக பெண்கள் பாஜகவுக்கு வாக்களிக்க துவங்கியுள்ளனர். இது காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவைப் பொறுத்தவரை முதலில் நாடு. பிறகுதான் கட்சி. 1980 பாஜக தொடங்கப்பட்டபோது பேசிய அடல்பிஹாரி வாஜ்பாய், Nation First, Party Next, Self Last அதாவது முதலில் நாடு, அடுத்து கட்சி, கடைசியில் தனிநபர் நலன் என்றார். இன்றளவும் பாஜகவின் கொள்கை அதுதான். இந்திய நாட்டில் உள்ள அனைவரையும் சமமாகவே பாஜக பார்க்கிறது. அதனால், கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறுபான்மையினர், பெரும்பான்மையினருக்கு சமமாக அனைத்து உரிமைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

தலைவராக இல்லாமல் காங்கிரஸை கட்டுப்படுத்தி வரும் ராகுல் காந்தி, திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் போல பிரிவினைவாத அரசியலை பேசி வருகிறார். இந்தியா ஒரே நாடல்ல என்றும், ஆங்கிலத்தை உயர்த்தி பிடித்து, இந்திய மொழிகளை மட்டம் தட்டியும் பேசி வருகிறார். ராகுல் காந்தியின் பிரிவினைவாத சிந்தனையைதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது. அதைதான் பிரதமர் மோடி மக்களிடம் அம்பலப்படுத்தியுள்ளார். உண்மை வெளிப்பட்டு விட்டதே என்ற பதற்றத்தில், தோல்வி பயத்தில் பாஜக மீது எப்போதும் வீசும் மதவாத குற்றச்சாட்டை வீசியுள்ளனர். மக்கள் அனைத்தையும் அறிவர். 400க்கும் அதிக இடங்களில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைப்பது உறுதி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *