நாயக் ஜதுநாத் சிங் | Jadunath Singh

நாயக் ஜதுநாத் சிங் | Jadunath Singh

Share it if you like it

நாயக் ஜதுநாத் சிங்
பாரதத்தின் மிக உயர்ந்த ராணுவ விருதான பரம் வீர் சக்ரா விருதை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமைக்குரியவர் முன்னாள் ராணுவ வீரர் நாயக் ஜதுநாத் சிங் ரத்தோர். 1947ம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரில் துணிச்சலுடன் போரிட்டு வீர மரணம் அடைந்த அவருக்கு பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
நாயக் ஜதுநாத் சிங் ரத்தோர், 1916 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் உள்ள கஜூரி கிராமத்தில் ரத்தோர் ராஜ்புத் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை பீர்பால் சிங் ரத்தோர் ஒரு விவசாயி. தாயார் பெயர் ஜமுனா கன்வர்.
ஜதுநாத் சிங் தனது கிராமத்தில் உள்ள ஒரு உள்ளூர் பள்ளியில் படித்தார். ஆனால் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக அவரால் நான்காம் வகுப்புக்கு மேல் கல்வியைத் தொடர முடியவில்லை. அவர் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை பண்ணையைச் சுற்றியுள்ள விவசாய வேலைகளில் தனது குடும்பத்திற்கு உதவினார். பொழுதுபோக்கிற்காக, அவர் மல்யுத்தம் செய்து இறுதியில் தனது கிராமத்தின் மல்யுத்த சாம்பியனானார்.
பின்னர் 1941 நவம்பர் 21 அன்று நாயக் ஜதுநாத் சிங் , ஃபதேகர் ரெஜிமெண்டல் சென்டரில் ராஜ்புத் படைப்பிரிவில் சேர்ந்தார். தனது பயிற்சியை முடித்த பிறகு, அவர் ராஜ்புத்திர படைப்பிரிவு 1ல் சேர்ந்தார். மேலும் இரண்டாம் உலகப் போரிலும் பங்கேற்றார். அப்போது ஜதுநாத் சிங் தனது திறமையை நிரூபித்தார்.
சுமார் 6 வருட சேவைக்குப் பிறகு, அவர் ஜூலை 1947 இல் லான்ஸ் நாயக் பதவிக்கு உயர்த்தப்பட்டார். டிசம்பர் 1947 இல், நாயக் ஜதுநாத் சிங்கின் படைப்பிரிவான ராஜ்புத் 1, ஜம்மு காஷ்மீரில் அக்டோபர் மாதம் பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற போரில் பங்கேற்க அனுப்பப்பட்டது.
அங்கு படைப்பிரிவு எண்.2க்கு தலைமை தாங்கிய நாயக் ஜாதுநாத் சிங் குறிப்பிடத்தக்க வீரத்தையும், சிறந்த தலைமையையும் வெளிப்படுத்தினார். தனது சிறிய படையால் எதிரிகளை குழப்பி பின்வாங்கச் செய்தார்.
முதல் தாக்குதலில், அவரது படைப்பிரிவை சேர்ந்த நான்கு பேர் காயமடைந்தனர். இருந்தும் அவர் மற்றொரு தாக்குதலுக்கு படைகளை மீண்டும் ஒழுங்கமைத்தார். எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதிலும், அவரது படை வீரர்கள் தங்கள் பகுதியை தொடர்ந்து பாதுகாத்தனர்.
எதிரிகளின் தாக்குதலின் போது அவரது பிரென் துப்பாக்கியை இயக்கும் வீரர் காயமடைந்தபோது, ஜதுநாத் சிங் தனிப்பட்ட முறையில் பிரென்-துப்பாக்கியை எடுத்து எதிரிகளை துவம்சம் செய்தார்.
எதிரிகள் இரண்டாம் முறை தாக்குதல் நடத்திய போதும் பலமான எதிர்ப்பை வெளிப்படுத்தி மீண்டும் அவர்களை பின்வாங்க செய்தார். ஆனால் இந்த கட்டத்தில், அவரது படையில் இருந்த அனைத்து வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். இந்த சூழ்நிலையில் அவரது பகுதியை கைப்பற்ற எதிரிகள் மூன்றாவது முறை தாக்குதல் நடத்தினர்.
அப்போது நாயக் ஜாதுநாத் சிங் ரத்தோர், சிறிதும் அஞ்சாமல் தனி ஒரு வீரராக, காயம்பட்ட நிலையிலும் எதிரிகளை தனது ஸ்டென் துப்பாக்கியால் தாக்கினார். அவரது துணிச்சலைக் கண்டு ஆச்சரியப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் குழப்பத்துடன் அங்கிருந்து பின்வாங்கினர். ஆனால் இந்த சண்டையின் போது எதிரிகளின் இரண்டு தோட்டாக்கள் அவரது தலை மற்றும் மார்பில் துளைத்து, நாயக் ஜதுநாத் சிங் வீரமரணம் அடைந்தார்.
போர்களத்தில் அவரது சிறந்த துணிச்சல், தளராத போராட்ட குணம் மற்றும் தேசத்திற்கான சுய தியாகம் ஆகியவற்றிற்காக நாட்டின் மிக உயர்ந்த வீர விருதான பரம் வீர் சக்ராவை வழங்கி பாரதம் அவரை கௌரவித்தது.
ஜதுநாத் சிங் பிறந்த கிராமத்திற்கு அருகில் உள்ள நகரமான ஷாஜஹான்பூரில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கத்திற்கு அவரது நினைவாக “பரம்வீர் சக்ரா லான்ஸ் நாயக் ஜதுநாத் சிங் விளையாட்டு அரங்கம்” என்று பெயரிடப்பட்டது. மேலும், ஒரு கச்சா எண்ணெய் டேங்கர் எம்டி நாயக் ஜாதுநாத் சிங் என்று பெயரில் உள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தை மூன்று முறை விரட்டியடித்து, கடைசி வரை அவர்கள் திட்டத்தை முறியடித்த மாபெரும் வீரரான ஜதுநாத் சிங்குக்கு நமது வீர வணக்கத்தை செலுத்துவோம்.


Share it if you like it