‘ஜெய்பீம்’: சூர்யா – ஜோதிகா மீது பாய்கிறது வழக்கு!

‘ஜெய்பீம்’: சூர்யா – ஜோதிகா மீது பாய்கிறது வழக்கு!

Share it if you like it

‘ஜெய்பீம்’ திரைப்படம் வன்னியர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சூர்யா – ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யும்படி சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த திரைப்படம் ‘ஜெய்பீம்’. இத்திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் சில காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து. குறிப்பாக, நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி அடித்து கொலை செய்து, பாண்டிச்சேரி மாநில எல்லையில் வீசிவிட்டு செல்வதாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனால், வன்னியர் சமூகத்தினர் கொதித்தெழுந்தனர். தங்களை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி நடிகர் சூர்யாவை கண்டித்து போராட்டங்களை நடத்தினர்.

எனினும், காட்சிகள் மாற்றப்படாமல் அப்படியே ஓ.டி.டி.யில் வெளிவந்தது படம். இப்படம் தியேட்டர்களில் ரிலீஸாகி இருந்தால் பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வன்னியர் சமூகத்தினர் திட்டமிட்டிருந்தனர். இதன் காரணமாகவோ என்னவோ படத்தை ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்தார் சூர்யா. ஆகவே, நடிகர் சூர்யா வன்னியர் சமூகத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், சூர்யா மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். எனவே, சமீபத்தில் திரைக்கு வந்த சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை தியேட்டர்களில் ரிலீஸாக விடாமல் தடுத்தனர் வன்னியர் சமூகத்தினர், குறிப்பாக, விழுப்புரத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை வெளியிட்ட தியேட்டரை வன்னியர் சமூகத்தினர் அடித்து நொறுக்கினர்.

இது ஒருபுறம் இருக்க, ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தினரை புண்படுத்தும் விதமாக சில காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது போலீஸில் புகார் அளித்தார் ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ். ஆனால், அவரது புகார் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சந்தோஷ் வழக்குத் தொடர்ந்தார். இதில், தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் ஜெய்பீம் படத்தில் காட்சிகள் இருப்பதாகவும், வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர் சூர்யா – ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது 5 நாட்களுக்குள் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், எஃப்.ஐ.ஆர். காப்பியை மே 20-ம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இதனால், நடிகர் சூர்யாவுக்கு சிக்கல் ஏற்பட்டருக்கிறது.


Share it if you like it