ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டர்!

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டர்!

Share it if you like it

ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் ஊடுருவல் முயன்ற 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் சமீபகாலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்திருக்கிறது. இவ்வாறு ஊடுருவ முயற்சிக்கும் பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். அதேபோல, ஆளில்லாத குட்டி விமானங்களான ட்ரோன்கள் மூலமும் ஊடுருவல் முயற்சி நடக்கிறது. ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை கடத்தி வரும் இதுபோன்ற ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தி வருகின்றனர்.

கடந்த மாதம் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டை சீர்குலைக்க பாகிஸ்தானின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் முயற்சி செய்தனர். இதை இந்திய ராணுவம் முறியடித்தது. கடந்த வாரம் பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படை வீரர்கள், பயங்கரவாதிகள் இருவரையும் சுட்டுக் கொலை செய்தனர். எனவே, ஊடுருவலை தடுக்க எல்லை பகுதியில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் மச்சில் செக்டார் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களும், குப்வாரா மாவட்ட போலீஸாரும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. பாதுகாப்புப் படையினரை பார்த்த பயங்கரவாதிகள் தப்பியோட முயன்றிருக்கிறார்கள். ஆனால், 2 பேரையும் ராணுவ வீரர்களும், பாதுகாப்புப் படையினரும் சுட்டுக்கொன்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் ராணுவத்தின் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


Share it if you like it