பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளின் கூட்டமைப்பான அனைத்து ஹூரியத் மாநாட்டு அலுவலகத்தை என்.ஐ.ஏ. நேற்று முடக்கி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று பிரிவினைவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறு வலியுறுத்தி வரும் 26 பிரிவினைவாத அமைப்புகள் இணைந்து கடந்த 1993-ம் ஆண்டு ஹூரியத் மாநாடு என்கிற அமைப்பை உருவாக்கின. இதன் அலுவலகம், ஸ்ரீநகருக்கு அருகே உள்ள ராஜ்பாக்கில் அமைந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக, இக்கூட்டமைப்பில் இடம் பெற்றிருக்கும் ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி கட்சியின் தலைவர் நயீம் கான், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், (ஊபா) கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி பாட்டியாலா என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம், நயீம் கானுக்கு சொந்தமான கட்டடங்களை பறிமுதல் செய்ய அனுமதி வழங்கியது. இதனடிப்படையில், நயீம் கானுக்கு சொந்தமான ஸ்ரீநகரின் ராஜ்பாக்கில் உள்ள ஹூரியத் மாநாட்டு அமைப்பின் அலுவலகத்திற்கு நேற்று சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் சீல் வைத்து, நுழைவாயிலில் நோட்டீஸ் ஒட்டினர். இந்த அலுவலகம், கடந்த 2019-ம் ஆண்டு பிரிவினைவாத அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக தற்போது வரை மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.