ஜம்மு காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதேபோல, உள்ளூர் பயங்கரவாதிகள் நடமாட்டமும் தலைதூக்கி வருகிறது. இந்த சூழலில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பூஞ்ச் மாவட்டம் பால்கோட் பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல, பஞ்சாப் மாநில எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டின் ட்ரோன்களையும் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
இந்த நிலையில், மென்தார் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து, நடமாட்டம் தென்பட்ட பகுதியை நோக்கி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு, பதில் தாக்குதலும் நடக்கவில்லை. எனினும், பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்கிற சந்தேகம் பாதுகாப்புப் படையினர் மத்தியில் இருந்து வருகிறது. ஆகவே, அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், சந்தேகத்துக்கிடமான பகுதிகளை நோக்கிச் செல்லும் சாலைகள் மூடப்பட்டன. தவிர, வனப்பகுதியிலும் தீவிர தேடுதல் வேட்டை தொடர்கிறது. ஆகவே, இந்த அதிரடி வேட்டை முடியும்வரை, அப்பகுதி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதனிடையே, குப்வாரா மாவட்டத்தில் என்.ஐ.ஏ. அமைப்பினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், முகமது உபைத் மாலிக் என்பவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.