ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து, இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பது வாடிக்கையாக இருக்கிறது. இதை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும், ராணுவ வீரர்களும் முறியடித்து வருகின்றனர். அந்த வகையில், இதுவரை ஏராளமான பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவ முயன்று விரட்டி அடிக்கப்பட்டிருப்பதுடன், பலரும் சுட்டுக் கொல்லவும் செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்தவகையில், கடந்த 21-ம் தேதி எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதியும், பாகிஸ்தான் உளவுப்பிரிவில் பணிபுரிந்தவருமான தபாரக் ஹூசைன் என்பவனை, ராணுவ வீரர்கள் சுட்டுப் பிடித்தனர்.
இந்த நிலையில்தான், 22-ம் தேதி இரவும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றிருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டர் பகுதி அமைந்திருக்கிறது. இங்குள்ள புகார்னி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஓ.சி.) வழியாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் 22-ம் தேதி இரவு ஊடுருவ முயன்றிருக்கிறார்கள். ஆனால், எல்லையைக் கடக்க 150 மீட்டர் தூரம் மட்டுமே இருந்த நிலையில், அந்த பயங்கரவாதிகளில் ஒருவன், அப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் மிதித்து விட்டான். இதில், இரு பயங்கரவாதிகளும் உடல் சிதறி பலியானார்கள். இந்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது.
இதையடுத்து, இந்திய ராணுவத்தினர் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் சோதனை செய்தனர். அப்போது, ஊடுருவிய பயங்கரவாதிகள் 2 பேரின் உடல்களும் அப்பகுதியில் கிடப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அப்பகுதியில் இன்னும் பல கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதால், பயங்கரவாதிகளின் உடலை உடனடியாக மீட்க முடியவில்லை. எனினும், இன்று காலை இரு பயங்கரவாதிகளின் உடல்களும் மீட்கப்பட்டதாக, பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் தேவேந்திர ஆனந்த் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.