மலேசியாவின் வீர தமிழ் பெண் ஜானகி தேவர்

மலேசியாவின் வீர தமிழ் பெண் ஜானகி தேவர்

Share it if you like it

மலேசியாவின் வீர தமிழ் பெண் ஜானகி தேவர்


சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அழைப்பை ஏற்று இந்திய தேசிய படையில் சேர்ந்த எண்ணற்ற பெண்களை பற்றி நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ஜானகி தேவர் என்ற இளம்பெண்.


பிரிட்டிஷ் மலேசியாவில் உருவான இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணி பெண்கள் படைபிரிவில் அங்கமாக வகித்து பின்னர் அதன் முதல் தளபதி லட்சுமி சாகலுக்கு பின் படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர். மலேசியாவில் இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கியவர். மக்கள் நலனுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது சொல்லப்படாத வாழ்க்கை வரலாற்றை இப்போது அறிந்து கொள்வோம்.


ஜானகி தேவர் பிரிட்டிஷ் மலேசியாவில் வசித்து வந்த ஒரு வசதியான தமிழ் குடும்பத்தில் 1925ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி பிறந்தார். 1943ம் ஆண்டு ஜூலை மாதம் ஜானகி தேவருக்கு 16 வயதான போது சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூருக்கு வந்தார். அவருடைய நோக்கம் இந்திய தேசிய ராணுவத்திற்கு நிதி சேகரித்தல் மற்றும் தன்னார்வலர்களை சேர்ப்பது.


ஜானகி தேவர் உட்பட ஏறக்குறைய 60000 இந்தியர்கள் அடங்கிய கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்துமாறு அனைவரையும் நேதாஜி வலியுறுத்தினார். நேதாஜியின் சக்திவாய்ந்த வார்த்தைகள் தன் நாட்டின் சுதந்திரத்திற்காக போராட வேண்டும் என்று ஜானகியின் இளம் மனதில் ஆர்வத்தைத் தூண்டியது.
அதன் முதல்கட்டமாக தான் அணிந்திருந்த விலையுயர்ந்த தங்க நகைகள் அனைத்தையும் கழற்றி இந்திய தேசிய ராணுவத்திற்கு நன்கொடையாக வழங்கினார். அடுத்தக்கட்டமாக இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணி பெண்கள் படைப்பிரிவில் சேர முடிவெடுத்தார்.


ஜானகி தேவரின் இந்த முடிவுக்கு அவரது குடும்பத்தினர் குறிப்பாக அவரது தந்தை சம்மதிக்கவில்லை. ஆனால் படையில் சேர விரும்பும் பெண்கள் தந்தை அல்லது கணவரின் கையொப்பம் பெற வேண்டும் என்பது விதி. அதனால் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஜானகி தன் முடிவில் உறுதியாக நின்றார். இறுதியில் ஜானகியின் தொடர் வற்புறுத்தலால் அவருடைய தந்தை தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார்.


அதைத் தொடர்ந்து 1943ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி சிங்கப்பூரின் வாட்டர்லூ தெருவில், ஜான்சி ராணி படைப்பிரிவில் முறையாக பொறுப்பேற்றார் ஜானகி. அப்போது அந்த படைப்பிரிவில் அவருடன் சேர்த்து 500 இளம்பெண்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சிங்கப்பூரில் குடியேறிய இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரின் மகளான கேப்டன் லட்சுமி சுவாமிநாதன் (பின்னர் லட்சுமி சாகல்) தலைமையில் பயிற்சி பெற்றார்கள்.


படைப்பிரிவில் இருந்த ஒவ்வொரு பெண்ணும் தான் உயிருடன் வீடு திரும்புவது கடினம் என்பதை அறிந்திருந்தனர். இருப்பினும் மனம் தளராமல் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டனர். வீட்டின் பாதுகாப்பை விட முகாம்களில் உள்ள கஷ்டங்களை விரும்பி ஏற்றுக்கொண்டனர். ஏனென்றால் அவர்கள் அனைவரும் தேசத்தின் சுதந்திரத்திற்காக மட்டுமல்லால் பெண் விடுதலைக்காகவும் போராடுகிறோம் என்பதை நன்கு உணர்ந்திருந்தனர்.


“நாங்கள் மென்மையான மற்றும் சிறந்த பாலினமாக இருக்கலாம் ஆனால் நிச்சயமாக ‘பலவீனமான’ என்ற வார்த்தைக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். எல்லாவிதமான அடைமொழிகளும் ஆண் தன் சுயநலனைக் காத்துக் கொள்வதற்காகவே நமக்குத் தந்திருக்கிறான். இந்திய அடிமைச் சங்கிலியுடன் சேர்ந்து இந்த மனித சங்கிலிகளை நாம் உடைத்தெறிய வேண்டிய நேரம் இது” என்று 17 வயது ஜானகி ஒரு மலாயா செய்தித்தாளில் எழுதினார். பெண் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார்.
ஜான்சி ராணி பெண்கள் படையில் இருந்த எந்தவொரு இளம் பெண்ணும் தைரியத்தையும் உறுதியையும் இறுதி வரை கைவிடவில்லை. போர்களத்தில் நூற்றுக்கணக்கான ஆண் வீரர்கள் சரணடைந்த போதும் ஒரு பெண் வீராங்கனை கூட தங்கள் படைப்பிரிவை கைவிடவில்லை. இந்திய தேசிய ராணுவம் மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தை சேர்ந்த பல அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.


ஜானகி தேவர் தன் விடாமுயற்சி மற்றும் தலைமை பண்பு காரணமாக விரைவில் லெப்டினன்ட் ஆக பதவி உயர்வு பெற்றார். 1944ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேப்டன் லக்ஷ்மி மேமியோவில் உள்ள அடிப்படை மருத்துவமனைக்கு நிரந்தரமாக மாற்றப்பட்டதால் அவருக்கு அடுத்தப்படியாக 18 வயதே ஆன ஜானகி தேவர் ஜான்சி ராணி படைப்பிரிவின் பர்மா குழுவின் தளபதியாக பொறுப்பேற்றார்.


அடுத்து வந்த மாதங்களில், ரங்கூனில் உள்ள செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனையை ஆங்கிலேயர்கள் குண்டுவீசித் தாக்கியபோது காயமடைந்த வீரர்களைக் காப்பாற்ற ஜானகி களத்தில் இறங்கினார். பின்னர், இந்திய தேசிய ராணுவம் பின்வாங்கும்போது, சக போராளிகளை பத்திரமாக திரும்பி அழைத்து வர நேதாஜியுடன் பர்மாவின் சதுப்பு நிலங்கள் மற்றும் காடுகள் வழியாக பல கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டார்.


ஆங்கிலேயர்கள் போரில் வெற்றி பெற்ற பிறகு இந்திய தேசிய ராணுவம் கலைக்கப்பட்ட பின் ஜானகி மலேசியாவில் உள்ள இந்திய காங்கிரஸ் மருத்துவப் குழுவில் சேர்ந்தார். இந்திய தேசிய காங்கிரஸால் மேற்கொள்ளப்பட்ட பணிகளால் ஈர்க்கப்பட்டு, 1946 இல் மலேசியாவில் இந்திய காங்கிரஸை நிறுவ ஜான் திவிக்கு உதவினார்.
1949 ஆம் ஆண்டில், அப்போது மலையாள தமிழ் நாளிதழான தமிழ் நேசனின் ஆசிரியர் மற்றும் பதிப்பாளரான ஆதி நாகப்பனை திருமணம் செய்துக்கொண்டார் ஜானகி.
அதன் பிறகு காலமும் வயதும் கடந்து போனாலும் ஜானகியின் மனதில், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உறுதி வறண்டு போகவில்லை. சமூக நலனில் ஆர்வம் கொண்ட ஜானகி, பெண் வழிகாட்டி சங்கம் மற்றும் தேசிய மகளிர் அமைப்பின் கவுன்சில் போன்ற அமைப்புகளில் தீவிரப் பங்கு வகிக்கத் தொடங்கினார்.
அவரது அயராத முயற்சியால் அவர் மலேசிய நாடாளுமன்றத்தின் மேல் சபையில் செனட்டராக பொறுப்பேற்றார். பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ள ஜானகி, கடந்த 2000ம் ஆண்டு இந்தியாவின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். இந்த விருதை பெற்ற வெளிநாட்டை சேர்ந்த முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையையும் பெற்றார்.


துணிச்சலுக்கும் கருணைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஜானகி தேவர், 2014ம் ஆண்டு மே 9ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். வீர தமிழ் பெண்ணான ஜானகி தேவர் சோதனைக் காலங்களில் ஆண்களுக்கு சரிசமமாக அவர்களுடன் தோளோடு தோள் நின்றவர். பிரிட்டிஷாரை தோற்கடிக்க இந்திய தேசிய ராணுவத்திற்க்கு உதவ வேண்டும் என்ற அவரது கனவு தோல்வியடைந்தாலும், சுதந்திரத்திற்கான அவரது அர்ப்பணிப்புக்காக அவர் என்றென்றும் நினைவுகூரப்படவும் மதிக்கப்படவும் தகுதியானவர்.


Share it if you like it