தெலுங்கு திரை உலக சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் பாரதப் பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கைக்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்து இருக்கின்றனர்.
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இதுதவிர, ஜனசேனா எனும் கட்சியையும் இவர் நடத்தி வருகிறார். பாரத நாட்டின் மீதும், பாரதப் பிரதமர் மோடி மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். கடந்த 2014 – ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு தனது ஆதரவினை வழங்கியவர்.
இதனிடையே, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுந்திர போராட்ட தியாகி வெங்கய்யாவிற்கு நாட்டின் மிக உயரிய விருதினை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பவன் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.
பிங்கலி வெங்கய்யா, இவர் 2 ஆகஸ்ட் 1876 – ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். சென்னையில் தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவர். அதன்பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பைத் தொடர்ந்தவர். மேலும், பாரத நாடு விடுதலை அடைய வேண்டி பல்வேறு தியாகங்களை செய்து இருக்கிறார்.
மகாத்மா காந்தியின் மீது தீவிர பற்றுக் கொண்டவர். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு நாட்டின் தேசியக் கொடி எவ்வாறு இருக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அந்த வகையில், பிங்கலி வெங்கய்யா 1 ஏப்ரல் 1921 – ஆண்டு தாம் உருவாக்கிய கொடியினை மகாத்மா காந்தியிடம் வழங்கி இருந்தார். இறுதியில், இவர் வடிவமைத்த கொடியே நாட்டின் தேசிய கொடியாக நாடு முழுவதும் பட்டொளி வீசி பறந்து கொண்டு இருக்கிறது.
தீவிர சுதந்திர போராட்ட தியாகியான ’பிங்கலி வெங்கய்யா’ மகாகவி பாரதியார் போல வறுமையின் பிடியில் சிக்கியவர். இறுதியில் 1963 – ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இதையடுத்து, கடந்த 2009 ஆம் ஆண்டு இவர் நினைவாக தபால் தலை வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த 2011 – ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது இவருக்கு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்புகளிடமிருந்து கோரிக்கை எழுந்தன. ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு இது குறித்து எந்தவிதமான கருத்தினையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், பிங்காலி வெங்கையா நினைவாகவும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையை மத்திய அரசு அவரின் பிறந்த நாளான இன்று வெளியிடுகிறது. இந்த நிலையில் தான், அவர் செய்த தியாகத்தை போற்றும் விதமாக, மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருதினை வழங்க வேண்டும் என தெலுங்கு திரை உலக சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் பிரதமர் மோடிக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.