இந்தியா வந்திந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பானி பூரியை ருசித்து சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் ஜி 20 மாநாடு நடைபெற்று வரும் நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 2 நாள் பயணமாக வருகை தந்திருந்தார். டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய ஜப்பான் பிரதமர் கிஷிடா, பிறகு இந்திய பயணத்துக்கான வருகை பதிவேட்டிலும் கையெழுத்திட்டார். தொடர்ந்து, டெல்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இருவரும் இரு நாடுகளை சேர்ந்த உயர்மட்ட குழுவினர் அடங்கிய கூட்டத்தில் நேரடி ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், இந்தியா – ஜப்பான் இடையேயான உறவை உலகளாவிய வகையில் மேம்படுத்த ஒப்பந்தம் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவும் கூட்டாக அறிவித்தனர். இந்த சந்திப்பின்போது, டெல்லி புத்த ஜெயந்தி பூங்காவில் பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் நேரத்தை செலவிட்டார். அப்போது, ஜப்பான் பிரதமருக்கு இந்தியாவின் உணவு வகைகளான ஃப்ரைடு இட்லிஸ், மாம்பழ ஜூஸ் மற்றும் பானி பூரி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இதில், பானி பூரியைத்தான் ஜப்பான் பிரதமர் மிகவும் விரும்பி சாப்பிட்டார். இந்த வீடியோவை சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஜப்பான் பிரதமர் பானி பூரி சாப்பிடும் இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறது.