ஹிந்து பாரம்பரியத்தை பறைசாற்றும் ‘கடைசி விவசாயி’!

ஹிந்து பாரம்பரியத்தை பறைசாற்றும் ‘கடைசி விவசாயி’!

Share it if you like it

சமீபத்தில் வெளியான ‘கடைசி விவசாயி’ திரைப்படம் ஹிந்துக்களின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கிறது என்பதுதான் சிறப்பம்சம்.

இந்தியாவை பொறுத்தவரை விவசாயம்தான் முதன்மையான தொழில். இதிலும், தமிழ்நாட்டில்தான் அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இதனால்தான், தமிழ்நாடு தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் தற்போது விவசாயம் அழிந்து வருகிறது என்றே சொல்லலாம். காரணம், வறட்சி மற்றும் விவசாய விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என்பன போன்றவைதான். இதனால், தமிழ்நாட்டில் ஏராளமான விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகி விட்டன. இன்னும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன.

விவசாயம் என்பது காவிரி, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட பாசன வாய்க்கால்கள் இருக்கும் பகுதிகளில் மட்டுமே நடந்து வருகிறது. இதர பகுதிகளில், அத்திபூத்தார்போல அங்கொன்றும் இங்கொன்றுமாக கிணற்றுப் பாசனம் மூலம் விவசாயம் நடந்து வருகிறது. இதனால், விவசாயம் அழி்ந்து விடும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கருத்தை மையமாக வைத்தே கடைசி விவசாயி படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, விவசாயத்தின் முக்கியத்துவத்தை இப்படம் ஆணித்தரமாக எடுத்துக் கூறியிருக்கிறது. அதேசமயம், நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில்தான் ஆன்மிகம் என்பது விரிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தின் போஸ்டர்களிலேயே ஓம் என்கிற ஹிந்துக்களின் கடவுளான முருகப்பெருமானின் திருநாமம் அச்சிடப்பட்டிருக்கிறது. அதேபோல, படத்திலும் விஜய்சேதுபதி முருகப்பெருமானின் பக்தராக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, குலதெய்வ வழிபாடு என்றால் என்ன? அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். முருக பக்தராக வரும் விஜய்சேதுபதியிடம் தமிழ்நாட்டை ஆள்வது யார் என்று ஒருவர் கேட்க, முருகப்பெருமான்தான் ஆட்சி செய்கிறார் என்பன போன்ற வசனங்கள் நச் ரகம். மேலும், பழனி உள்ளிட்ட கோயில்களுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களை கிண்டல் செய்யும் இந்த சமூகத்துக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில், விஜய்சேதுபதி படம் முழுவதும் ஒவ்வொரு முருகன் கோயிலாக பாதயாத்திரை சென்று வருவதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, விவசாயிகளும், ஹிந்துக்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ‘கடைசி விவசாயி’.


Share it if you like it