கள்ளக்குறிச்சியில் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து தி.மு.க. பொதுக்கூட்டம் நடத்தி இருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதற்காக, பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேலும், கூட்டத்திற்கு வருபவர்கள் அமர்வதற்கு பேருந்து நிலையம் முழுவதும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. இதனால், பேருந்து நிலையத்தில் பஸ்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆகவே, பஸ்களை ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் சென்றனர். இதன் காரணமாக, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கச்சிராயப்பாளையம் மார்க்கமாக செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இது ஒருபுறம் இருக்க, பேருந்துகள் ஆங்காங்கே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதுதான் பொதுமக்கள் மத்தியில் தி.மு.க. மீது கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதைப் பார்த்த பலரும், தி.மு.க.வின் அராஜகத்தை கடுமையாக விமர்சித்தனர். மேலும், பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை எப்படி அனுமதி அளித்தது? பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் தி.மு.க.வின் இதுபோன்ற செயல்களுக்கு காவல்துறை துணை போவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.