மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் சமய வகுப்பு மாநாடு நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வழக்கமாக நடந்து வரும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்காமல் அனுமதி தர வேண்டும் என்று கோரி, பா.ஜ.க. எம்.எல்.ஏ. காந்தி, கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யிடம் மனு கொடுத்திருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலின் மாசிக்கொடை விழாவின்போது, ஹைந்தவ சேவா சங்கம் சார்பில், கோயில் வளாகத்தில் சமய வகுப்பு மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டும் சமய வகுப்பு மாநாடு நடத்துவதற்காக, ஹைந்தவ சேவா சங்கம் சார்பில், கடந்த 5-ம் தேதி பந்தல் அமைப்பதற்கான கால்கோள் விழா நடந்தது. ஆனால், கோயில் வளாகத்தில் தனியார் அமைப்பு சார்பில் சமய வகுப்பு மாநாடு நடத்தக் கூடாது என்று இந்து அறநிலையத்துறை அனுமதி மறுத்து விட்டது. மேலும், மண்டைக்காடு பகவதியம்மன் பெயரில் வசூல் செய்யவோ, ரசீதுகள் வழங்கவோ கூடாது என்றும் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.
இதுதான் ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கூடாது. மாநாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஐயப்ப சேவா சமாஜத்தின் மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் ராஜா கூறுகையில், “ஹைந்தவ சேவா சங்கம் சார்பில், மண்டைக்காட்டு பகவதியம்மன் கோயில் வளாகத்தில் கடந்த 89 ஆண்டுகளாக சமய வகுப்பு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. எனவே, வழக்கம்போல் நிகழாண்டும் நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.
மேலும், நாகராஜா கோயில் தேரோட்டத்தின்போது, தேரில் உள்ள தேக்கிலான மரப்பொம்மைகள் இந்தாண்டு பொருத்தப்படவில்லை. இதுகுறித்து விசாரணை செய்து, இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலையத்துறை ஆலய திருவிழா நிகழ்ச்கிகளை அந்தந்த ஆலய பக்தர்கள் சங்கமே நடத்துகிறது. ஆனால், தற்போது ஆலயங்களில் உள்ள பக்தர்கள் சங்கங்களை கலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவே, இதுகுறித்தும் தமிழக அரசு விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
இந்த நிலையில், மண்டைக்காட்டில் சமய வகுப்பு மாநாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி, பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யிடம் மனு கொடுத்திருக்கிறார். அம்மனுவில், “மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலய மாசிக்கொடை விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் இந்து சமய மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1936-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த மாநாட்டை, ஹைந்தவ (இந்து) சேவா சங்கம் மற்றும் அறநிலையத்துறை இணைந்து நடத்தி வருகின்றன. நிகழாண்டு 86-வது மாநாடு மார்ச் 5-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில், ஹைந்தவ சேவா சங்கம் மாநாட்டை நடத்தக் கூடாது என்றும், அரசுதான் நடத்த வேண்டும் என்றும், மாநாடு பந்தலுக்கு டெண்டர் கொடுத்து பந்தல் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாக, கோயில் ஸ்ரீகாரியம், ஹைந்தவ சேவா சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது பக்தர்களுக்கும், சேவா சங்க உறுப்பினர்களுக்கும் வருத்தத்தையும், வேதனையையும் அளித்திருக்கிறது. அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் நல்லிணக்கத்தோடு அமைதியாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில், கடந்த 85 ஆண்டுகளாக நடந்ததுபோல, நிகழாண்டும், இந்து சமய மாநாட்டை அதே இடத்தில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடத்த அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டிருக்கிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஹிந்து கோயில்களை இடிப்பது, ஹிந்து கோயில்களில் ஆகம விதிகள் மீறல், ஹிந்து பண்டிகைகளுக்கு தடை உள்ளிட்ட ஹிந்துக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 86 ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்ச்சிக்கு தற்போது தி.மு.க. அரசு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.