கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியினர் பிச்சைக்காரர்களை தாக்கி 20,000 ரூபாய் பறித்துச் சென்ற சம்பவம் அம்பலமாகி சந்தி சிரிக்கிறது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமன் ஜி. இவர், தனது மனைவி லட்சுமி மற்றும் உறவினர் சாவித்திரி ஆகியோருடன், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையம் அருகே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு யாசகம் செய்வதுதான் பிழைப்பு. இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, மதுபோதையில் இருந்த 3 இளைஞர்கள், ராமன் ஜி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரையும், அவரது மனைவி உள்ளிட்ட இரு பெண்களையும் தாக்கி இருக்கிறார்கள்.
மேலும், அவர்கள் யாசகம் செய்து சேமித்து வைத்திருந்த 20,000 ரூபாயையும் அபகரித்துக் கொண்டு சென்று விட்டார்கள். இதில், காயமடைந்த ராமன் ஜி உள்ளிட்ட மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், மார்த்தாண்டம் போலீஸார் மருத்துவமனைக்கு நேரில் சென்று மூவரிடமும் விசாரணை நடத்தினர். இதில், ராமன் ஜி குடும்பத்தினரை தாக்கியது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷாந்த், பென்னிக்ஸ் மற்றும் வினித் என்பது தெரியவந்தது.
ஆனால், அரசியல் கட்சி பிரமுகர்களின் அழுத்தம் காரணமாக மூவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட ராமன் ஜி குடும்பத்தினர், தினமும் காவல் நிலையத்துக்குச் சென்று, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டுத் தரும்படி கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், லோக்கல் அரசியல் பிரமுகர்கள் சிலரிடம் தங்களது நிலையை எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, அபிஷாந்த் உட்பட 3 பேர் மீதும் போலீஸார் பெயருக்கு வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இதுவரை கைது செய்யவில்லை.