கொள்கைகளை மாற்றினால் பா.ஜ.க.வுடனும், சங் பரிவார் அமைப்புகளுடனும் கைகோர்க்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தயங்காது என்று, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். திராவிடர் கழத்தினரை விட, ஹிந்துக்களையும், ஹிந்து தெய்வங்களையும், ஹிந்து தர்மத்தையும் மிகவும் இழிவாகப் பேசுபவர் இவர்தான். சனாதன சக்திகளை வேரறுப்போம் என்று கூறிக்கொண்டு, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்களுக்கு ஆதரவாக பேசுவார், செயல்படுவார். ஹிந்து கோயில்களை ஆபாசத்தின் உச்சம் என்று இவர் சொன்னது ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதேபோல, உயர் ஜாதி பெண்களை குறிப்பிட்டு, அடங்கமறு, அத்துமீறு என்று பட்டியலின சமூக இளைஞர்களை உசுப்பேற்றி விட்டது, கொங்கு மண்டலத்தை கொதிப்படையச் செய்தது. இதனால், இவர் கொங்கு பகுதிக்கே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
அதேபோல, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகளை பற்றி அவதூறாக பேசி வருகிறார். சமீபத்தில் கூட, மனுஸ்ம்ருதி புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதாகக் கூறி, அப்புத்தகத்தை அச்சிட்டு விநியோகம் செய்தார். தேர்தலில் தனியாக நின்றால் ஒரு சீட் கூடக் கிடைக்காது என்பதால், தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளின் தயவில் ஒரு சில எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பெற்று கட்சி நடத்தி வருகிறார். லெட்டர் பேடு கட்சிகளுடன் போட்டி போடும் இவர், ஏதோ சர்வதேச அளவில் கட்சி நடத்துவதுபோல கனவில் மிதந்து கொண்டு சர்வதேச அரசியல் பேசுவார். பாரத பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தமிழ்நாட்டில் மட்டும் கடுமையாக விமர்சனம் செய்து பேசும் திருமாவளவன், டெல்லிக்குச் சென்றால், இருவரையும் பார்த்து கும்பிடு போடுவார்” என்றார்கள்.
இது ஒருபுறம் இருக்க, திருமாவளவனின் செயல்பாடுகள், ஹிந்து மதத்துக்கு எதிராவும், ஹிந்து அமைப்புகளுக்கு எதிராகவும் இருப்பதோடு, அவதூறாகவும் பேசி வருவதால், இவர் மீது டெல்லிக்கு ஏகப்பட்ட புகார்கள் சென்றன. நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் எதிராக செயல்பட மாட்டேன் என்று சத்தியப்பிரமாணம் எடுத்த ஒரு மக்கள் பிரதிநிதி, அரசியலைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வருவதால் அவரது எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் என்று புகார்கள் பறந்தன. மேலும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் எம்.பி. பா.ஜ.க.வைச் சேர்ந்த சசிகலா புஷ்பாவின் கணவருமான வழக்கறிஞர் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மீது வழக்குத் தொடர்ந்தார். அப்போது, திருமாவளவனின் எம்.பி. பதவியை பறிக்காமல் விடமாட்டேன் என்று செய்தியாளர்களிடம் சபதமும் செய்தார்.
இந்த நிலையில்தான், பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் அமைப்புகளுடன் கூட்டணி வைக்க தயார் என்று திருமாவளவன் பேசி இருக்கிறார். கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 25-வது கிறிஸ்துமஸ் விழா கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்தது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் கலந்து கொண்டு, கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, ஏழைகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய திருமா, “நாம் பேரணி, மாநாடு நடத்தினால் வன்முறை வெடிக்கும் என்று வதந்திகளை பரப்புகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகளை விமர்சிக்கும்போது ஹிந்துக்களை எதிர்ப்பதாக வதந்திகளை பரப்புகிறார்கள். நான் ஹிந்துக்களை எதிர்க்கவில்லை. எங்கள் வீட்டில் உள்ளவர்களும் ஹிந்துக்கள்தான். கட்சியில் இருப்பவர்களில் 80 சதவிகிதம் ஹிந்துக்கள்தான். கொள்கைகளை மாற்றினால் பா.ஜ.க.வுடனும், சங்பரிவார் அமைப்புகளோடும் கைகோர்க்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் தயங்காது” என்று கூறியிருக்கிறார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டுத்தான், பதவி பயம் கண்ணு முன்னால வந்து போகுமுல்ல என்று கிண்டல் செய்கிறார்கள் நெட்டிசன்கள்.