தி.மு.க.வை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர் ராஜினாமா!

தி.மு.க.வை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர் ராஜினாமா!

Share it if you like it

தி.மு.க.வை கண்டித்து, அக்கட்சியின் பெண் கவுன்சிலர் ராஜினாமா செய்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில்தான் இப்படியொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொள்ளாச்சி நகராட்சியில் தி.மு.க.தான் பெரும்பான்மையான வார்டுகளை கைப்பற்றியது. இதையடுத்து, நகராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற போட்டா போட்டி நடந்தது. 7-வது வார்டில் வெற்றிபெற்ற கண்ணுச்சாமியின் மகள் நர்மதாவை, பரிந்துரை செய்தார் மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன். இவர் பட்டப்படிப்பை முடித்து போட்டித் தேர்வுக்கு தயாராகி வந்தார். எனவே, படித்தவர் என்கிற அடிப்படையில் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதேசமயம், பொள்ளாச்சி நகர தி.மு.க. செயலாளராக சியாமளா நவநீதகிருஷ்ணன், தனக்குத்தான் நகராட்சி தலைவர் பதவி வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் அடம் பிடித்தார்.

எனவே, கட்சித் தலைமையும் சியாமளாவையே நகராட்சித் தலைவராக அறிவித்தது. இதனால், நர்மதா பயங்கர அப்செட்டில் இருந்து வந்தார். அதேசமயம், தனக்கு வாக்களித்த வார்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்பதில், குறியாக இருந்தார் நர்மதா. ஆனால், இங்குதான் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது. அதாவது, தனக்கு எதிராக நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டதால், நர்மாவை புறக்கணிக்கத் தொடங்கினார் சேர்மன் சியாமளா. தனது வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து நகர்மன்றக் கூட்டத்தில் நர்மதா கொண்டுவரும் தீர்மானங்கள் புறக்கணிக்கப்பட்டன. இதனால், கடும் விரக்தியில் இருந்து வந்தார் நர்மதா. இதனிடையே, நர்மதாவின் தந்தை கண்ணுச்சாமி, நகரச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டார். ஆனால், இதுவும் நடக்கவில்லை. இதனால், கண்ணுச்சாமியும் அதிருப்தியில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில்தான், நேற்று நடந்த கூட்டத்துக்குப் பிறகு, தனது ராஜினாமா கடிதத்தை நகராட்சி ஆணையர் தாணுமூர்த்தியிடம் வழங்கினார். இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தவர், இது எனக்கான களம் அல்ல. நான் மக்களுக்கு பணியாற்ற வேறொரு களம் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். தி.மு.க.வை கண்டித்து தி.மு.க. கவுன்சிலரே ராஜினாமா செய்திருக்கும் இச்சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளை தி.மு.க.வினரே ஆக்கிரமித்துக் கொண்டதால், தி.மு.க. மீது கூட்டணிக் கட்சியினர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்த சூழலில், சொந்தக் கட்சியினரே அதிருப்தியடையும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.


Share it if you like it