உலகக்கோப்பையை முத்தமிட்ட முதல் இந்திய வீரர் கபில் தேவ் !

உலகக்கோப்பையை முத்தமிட்ட முதல் இந்திய வீரர் கபில் தேவ் !

Share it if you like it

கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்று இன்றுடன் 40 ஆண்டுகளாகிறது. அந்த உலகக்கோப்பையில் என்ன நடந்தது, அதன்பின்னர் இந்திய அணி அடைந்த வளர்ச்சிக்கு அந்தப் போட்டி எப்படி காரணமாக அமைந்தது என்பது பற்றி பார்க்கலாம்.

1983, ஜூன் 25 இந்திய அணி உலகக்கோப்பையை வென்று 40 ஆண்டுகளாகிறது. ஹாக்கியை தவிர்த்து எந்த விளையாட்டிலும் வெற்றிபெற முடியாது என்று நினைத்த இந்திய மக்களுக்கு, கிரிக்கெட்டிலும் இந்தியாவால் சாதிக்க முடியும் என்று கபில் தேவ் தலைமையிலான இந்திய வீரர்கள் நிரூபித்து காட்டினர். சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட்டுக்கு வளர்ச்சி பெறுவதற்கு அந்தப் போட்டிதான் மிக முக்கிய காரணம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்திய கிரிக்கெட் வரலாறு மாறியது அந்த ஒரு போட்டியால் தான்.

1983ஆம் ஆண்டுக்கு இந்திய அணி பங்கேற்ற உலகக்கோப்பைத் தொடர்களில் ஈஸ்ட் ஆப்பிரிக்கா என்ற ஒரு அணியை மட்டுமே வீழ்த்தி இருந்தது. இதனால் இந்திய அணி பற்றிய அச்சமோ, கவலையோ எந்த அணிக்கும் இருக்கவில்லை. நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து உள்ளிட்ட 3 அணிகளில் ஒருவர் தான் கோப்பையை வெல்வார்கள் என்று உறுதியாக நம்பப்பட்டது. ஏன், இந்திய வீரர்களுக்கே அந்த நம்பிக்கை இருக்கவில்லை.

ஆனால் கபில் தேவ் என்ற போராட்ட நாயகன் அனைத்தையும் மாற்றிக் காட்டினார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆடிய ஒரு இன்னிங்ஸ் ஒட்டுமொத்த இந்திய வீரர்களுக்கும் எழுச்சியை கொடுத்தது. ரிச்சர்ட்ஸ் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துவிட்டு, நம்மால் வெல்ல முடியும் என்று சொல்வதற்கு எந்த கேப்டனுக்கு தைரியம் வரும். ஆனால் கபில் தேவ் சொன்னதோடு செய்தும் காட்டினார். அதேபோல் அப்போது நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகள் 50 ஓவர்கள் ஆட்டமல்ல. 60 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக விளையாடப்பட்டது. கிட்டத்தட்ட 3 ரன் ரேட்டில் விளையாடினாலே வென்றுவிடலாம் என்ற நிலை. இந்திய வீரர்கள் அசரவில்லை. பல்விந்தர் சிங் தொடங்கிய விக்கெட் வேட்டையை, அமர்நாத் தொடர்ந்துகொண்டிருந்தார். ஆனால் ரிச்சர்ட்ஸால் வெளுக்கப்பட்ட மதன் லால் தான் அன்றைய நாளின் மிரட்டல் நாயகன். மதன் லால் வீசிய முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகளை விளாசினார் ரிச்சர்ட்ஸ்.

அதில் இருந்து மீண்டு வந்த மதன் லால் ரிச்சர்ட்ஸ், கோம்ஸ் என்று 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி இறுதியாக 43 ரன்கள் வித்தியாசத்தில் 2 முறை உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி முதல்முறையாக உலகக்கோப்பையை வென்றது. ஒரு உலகக்கோப்பை வெற்றியின் மாற்றத்தை உணர, பின்வரும் ஒரேயொரு செய்தியே போதும். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கபில் தேவ் ஆடிய ஆட்டம் எந்த தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படவில்லை. பிபிசி ஸ்ட்ரைக் செய்திருந்ததால், இந்தியா – ஜிம்பாப்வே இடையிலான போட்டியை வீடியோ பதிவு செய்ய கூட யாரும் வரவில்லை. ஆனால் அதே நாளில் ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து – இலங்கை, இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் விளையாடின. அதில் நியூசிலாந்து – இலங்கை போட்டியை கவர் செய்வதற்காக புகைப்படங்கள் எடுக்க நிர்வாகிகள் சென்றிருந்தனர். ஆனால் இந்திய அணி பக்கம் பிபிசியின் யாரும் தலை கூட காட்டவில்லை.

இந்திய அணி விளையாடும் ஆட்டங்களை ஒளிபரப்ப கூட தகுதியில்லாதவையாக பிபிசி நினைத்தது. ஆனால் இன்று இந்திய அணி விளையாடும் போட்டியை ஒளிபரப்புவதற்காக எத்தனை ஆயிரம் கோடிகள் கொடுக்கவும் ஏராளமான நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந்த 40 ஆண்டுகளில் இந்திய அணி அடைந்திருக்கும் வளர்ச்சி இதுதான். இந்த வளர்ச்சிக்கு கபில் தேவ் மற்றும் அந்த வீரர்கள் பெற்ற முதல் உலகக்கோப்பைதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it