பெங்களூருவில் அல்கொய்தா பயங்கரவாதி கைது!

பெங்களூருவில் அல்கொய்தா பயங்கரவாதி கைது!

Share it if you like it

பெங்களூருவில் அல்கொய்தா பயங்கரவாதி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் அல்-கொய்தா, சிமி, அல் உம்மா, பி.எஃப்.ஐ. உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. ஆகவே, மேற்கண்ட இயக்கங்களுடன் தொடர்புடைய நபர்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) கண்காணித்து வருகின்றனர். இவர்கள் நடத்திய பல்வேறு அதிரடி சோதனைகளில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில், பெங்களூருவில் நடத்திய சோதனையில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த மென்பொறியாளர் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்திருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்த தனிச்சந்திராவில் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தவர் ஆரிப். இவர், கொரோனா லாக்டவுனுக்கு பிறகு வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருகிறார். இந்த சூழலில், கடந்த 2 ஆண்டுகளாக அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் ஆன்லைன் வழியே தொடர்பில் இருந்து வந்திருக்கிறார். மேலும், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைவதற்காக ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் பஓன்ற நாடுகளுக்கு செல்லவும் முயற்சி செய்திருக்கிறார். இவர், வேறு என்னென்ன திட்டங்கள் தீட்டி இருக்கிறார் என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கூறுகையில், “ஆரிஃப், வீட்டில் இருந்தபடியே தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவரை கண்காணித்து வந்தோம். அப்போது, ஆரிப் கடந்த 2 ஆண்டுகளாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இந்த அமைப்பின் டெலிகிராம் குழுக்களில் இவர் உறுப்பினராக செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே, மாநில பாதுகாப்புத்துறை அலுவலர்களுடன் சேர்ந்து அவரை கைது செய்தோம். முதல்கட்ட விசாரணையில் அவர் கடந்தாண்டு மார்ச் மாதம் ஈராக் வழியாக சிரியா செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. மேலும், இவரது சொந்த ஊர் நண்பர்கள், உறவினர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனர்.


Share it if you like it