ராக்கியை கழற்றி வீசிய கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம்!

ராக்கியை கழற்றி வீசிய கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம்!

Share it if you like it

கர்நாடகாவில் கிறிஸ்தவ மிஷனரி பள்ளி ஒன்றில், மாணவர்கள் கையில் கட்டியிருந்த ராக்கி கயிறை, கழற்றி குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பெற்றோர் எதிர்ப்பைத் தொடர்ந்து, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது பள்ளி நிர்வாகம்.

கர்நாடகா மாநிலம் மங்களூரு மாவட்டம் கடிபல்லாவில் இன்ஃபண்ட் மேரிஸ் என்கிற பெயரிலான கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆங்கில மீடியம் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், நேற்று முன்தினம் ரக்ஷாபந்தன் விழா கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து, இப்பள்ளியில் படிக்கும் ஹிந்து மாணவர்கள் சிலர், கையில் ராக்கி கயிறு அணிந்து வந்திருக்கிறார்கள். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அப்பள்ளியின் ஆசிரியர்கள் சிலர், மாணவர்கள் கையில் கட்டியிருந்த ராக்கி கயிறுகளை கழற்றுமாறு வற்புறுத்தி, அவற்றை வாங்கி குப்பைத் தொட்டியில் எறிந்திருக்கிறார்கள்.

பின்னர், பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவர்களிடம், கையில் கட்டியிருந்த ராக்கி கயிறு எங்கே என பெற்றோர்கள் கேட்கவே, நடந்த விவரத்தைக் கூறியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், மறுநாளான நேற்று காலையில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பள்ளி வளாகத்தில் திரண்டனர். இச்செய்தி ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் பரவவே, பா.ஜ.க. மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பள்ளிக்கு படையெடுத்தனர். மேலும், ராக்கி கயிறுகளை கழற்றி எரிந்த பள்ளி நிர்வாகம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து, ஹிந்து மாணவர்களை புண்படுத்தியதற்காகவும், அவமானப்படுத்தியதற்காகவும் பள்ளி நிர்வாகம் மன்னிப்புக் கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொடர்ந்து, பள்ளியின் கன்வீனர் பாதிரியார் சந்தோஷ் லோபோ, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஹிந்து அமைப்பினரிடம் மன்னிப்புக் கோரினார். இதைத் தொடர்ந்து, பெற்றோர்களும், ஹிந்து அமைப்பினரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாதிரியார் சந்தோஷ் லோபோ, ​​“நாங்கள் அனைத்து ஆசிரியர்களின் கூட்டத்தை நடத்தினோம். தவறு செய்தவர்கள் மன்னிப்புக் கேட்டனர். இதைத் தொடர்ந்து, பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது” என்றார்.

பொதுவாக, கிறிஸ்தவப் பள்ளிகளில் படிக்கும் ஹிந்து மாணவர்களை குறிவைத்து, விபூதி பூசி வருவது, கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து வருவது, கையில் சுவாமி கயிறு கட்டி வருவது போன்ற செயல்களை சுட்டிக்காட்டி அவமானப்படுத்துவதும், மத, கலாசார பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை குறிவைத்து இழிவுபடுத்துவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த சம்பவமும் ஒன்று. இதேபோல, ஏற்கெனவே குஜராத் மாநிலம் பருச்சில் உள்ள ஒரு கிறிஸ்டியன் கான்வென்ட் பள்ளியில் ஒரு சம்பவம் அரங்கேறியது. அதாவது, மாணவிகள் கையில் மருதாணி (மெஹந்தி) அணிந்து வந்ததால், சுமார் 40 சிறுமிகளை அப்பள்ளியின் நிர்வாகி வகுப்பறைக்கு வெளியே 4 மணிநேரம் நிற்க வைத்த சம்பவம் அரங்கேறி, பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து பள்ளி நிர்வாகம் மன்னிப்புக் கேட்டது.


Share it if you like it