கர்நாடகாவில் யார் முதல்வர் என்பது தொடர்பாக, முன்னாள் முதல்வர் சித்தராமையா கோஷ்டிக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கோஷ்டிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இது தொடர்பாக இரு கோஷ்டிகளுக்கும் இடையே கடுமையான போஸ்டர் யுத்தம் நடந்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 10-ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. இத்தேர்தலில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. பா.ஜ.க. 65 இடங்களிலும், மதசார்பற்றி ஜனதா தளம் 19 இடங்களிலும், சுயேட்சைகள் 4 இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்று ஆட்சியை கைப்பற்றி இருக்கம் நிலையில், முதல்வர் யார் என்பதில்தான் தற்போது கடுமையான போட்டி ஏற்பட்டிருக்கிறது.
பொதுவாக, காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, வெற்றிக்குப் பிறகே யார் முதல்வர் என்று அறிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. அதேபோல, இத்தேர்தலிலும் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவிக்கவில்லை. எனினும், ஏற்கெனவே கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, சித்தராமையாதான் முதல்வராக இருந்தார். ஆகவே, அவருக்குத்தான் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதேசமயம், இந்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்தவர், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார்தான். ஆகவே, அவருக்குத்தான் முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்கிற குரல் உரக்க எழுந்திருக்கிறது.
இது தொடர்பாக இரு தரப்பினரின் ஆதரவாளர்களும் கடுமையான போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். எனினும், சித்தராமையாவே முதல்வராக அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், டி.கே.சிவக்குமாருக்கு 84 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், சித்தராமையாவுக்கு 52 பேரின் ஆதரவு மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, சித்தராமையாவை முதல்வராக அறிவித்தால் சிவக்குமாரின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி மற்றும் கொந்தளிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
ஆகவே, மகாராஷ்டிராவில் சிவசேனா பிளவுபட்டுபோல, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பிளவுபட அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். எனவே, இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தலைமை, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வெயிட் அண்ட் ஸீ…